2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

போட்டி நிர்ணயங்கள், ஸ்பொட் ஃபிக்சிங்குகள்: ஐ.சி.சி மீது மக்கலம் விமர்சனம்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 07 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

போட்டி நிர்ணயம், ஸ்பொட் பிக்சிங் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதில், காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காமை குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) மீது, நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரென்டன் மக்கலம், கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
எம்.சி.சி கிரிக்கெட்டின் உணர்வுக்கான கொலின் கௌட்ரி உரையை, லோர்ட்ஸில் வைத்து உரையாற்றியபோதே, தனது விமர்சனத்தை அவர் வெளியிட்டார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரரான கிறிஸ் கெயின்ஸ், போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கு இடம்பெற்றபோது, கெயின்ஸூக்கெதிராக தான் வழங்கிய சாட்சியின் பக்கம் இன்னமும் நிற்பதாகவும் மக்கலம் குறிப்பிட்டார். அந்த வழக்கில், கெயின்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்திலிருந்திருந்தும் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

'சௌத்வேர்க் க்றெளண் நீதிமன்றத்தில் நான் வழங்கிய அறிக்கைகள், சாட்சிகள் ஆகியவற்றின் பக்கம் நான் இருக்கிறேன் என்பதை, கிரிக்கெட்டின் தாயகத்தில் (லோர்ட்ஸ்) நின்றுகொண்டு நான் உறுதிப்படுத்துவது, பொருத்தமானது என நினைக்கிறேன்" என அவர் தெரிவித்தார்.

போட்டி முறைகேடுகள் அல்லது அதற்கான முயற்சிகள் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழலுக்கெதிரான அமைப்பிடம் முறைப்பாடு செய்ய வேண்டுமென்பது, கட்டாயமானதென்ற போதிலும், போட்டியை நிர்ணயம் செய்வது தொடர்பான கெய்ன்ஸின் அணுகலை, 2011ஆம் ஆண்டு வரை அச்சம் காரணமாகத் தெரிவித்திருக்கவில்லையெனத் தெரிவித்த மக்கலம், இறுதியாக முறைப்பாடு செய்தபோது, அவரது குற்றச்சாட்டுகள், அதிகாரியொருவரால் குறிப்பெடுக்கப்பட்டதாகவும், ஆனால் அது குரல்பதிவு செய்யப்படவில்லையெனவும் தெரிவித்தார்.

இவ்வாறு இரண்டு சாட்சிய அறிக்கைகளை வழங்கிய பின்னர், மூன்றாவது அறிக்கை, மெட்ரோபொலிட்டன் பொலிஸாரிடம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்த பிரென்டன் மக்கலம், முதலிரு அறிக்கைகளோடு ஒப்பிடும்போது, பொலிஸாரிடம் வழங்கியது, மிகவும் முன்னேற்றகரமானதாக அமைந்ததாகத் தெரிவித்தார்.

அத்தோடு, பிரென்டன் மக்கலம் வழங்கிய சாட்சியம், ஊடகங்களில் கசிய விடப்பட்ட நிலையில், அது குறித்தும் தனது விமர்சனத்தை, அவர் வெளிப்படுத்தினார். 'ஐ.சி.சி-இடம் சாட்சியம் வழங்கியுள்ள எந்தவொரு சாட்சியும், அவ்வாறான நிலைமைக்குள் இன்னொருமுறை தள்ளப்படக்கூடாது. அந்தக் கசிவு, எனக்கு விளங்கப்படுத்தப்படவில்லை. என்னுடைய அறிவுக்கு எட்டியவரை, யாருமே பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை. இந்த நிலைமையில், ஐ.சி.சி மீது நம்பிக்கை வைப்பது கடினமானது" என அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .