2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

பெனால்டியில் இத்தாலியைத் தோற்கடித்து அரையிறுதியில் ஜேர்மனி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 03 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிக்கெதிரான காலிறுதிப் போட்டியில், பெனால்டியில் த்ரில் வெற்றி பெற்ற ஜேர்மனி, பிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின், அரையிறுதிப் போட்டிகளுக்கான தனது இடத்தைப் பதிவு செய்து கொண்டது.

போட்டியின் 65ஆவது நிமிடத்தில் மெசூட் ஒஸில் பெற்ற கோலின் காரணமாக, போட்டியின் வழமையான நேரத்திலேயே தற்போதைய உலக சம்பியன்களான ஜேர்மனி வெற்றி பெறும் என்ற நிலை காணப்பட்டது. எனினும் போட்டியின் 78ஆவது நிமிடத்தில் ஜேர்மனியின் ஜெரோம் போட்டாங், பந்தை கையால் கையாண்டமை காரணமாக வழங்கப்பட்ட பெனால்டியை இத்தாலியின் லியனர்டோ பொனூச்சி கோலாக்க கோல் எண்ணிக்கை சமநிலையானது. அதனைத் தொடர்ந்த மேலதிக நேரத்திலும் இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில் நிறைவில் போட்டியின் முடிவு பெனால்டிக்கு சென்றிருந்தது.

ஒன்பதாவது பெனால்டி வரை சென்ற போட்டி முடிவில், இத்தாலியின் மத்தியோ தர்மியானின் பெனால்டியை ஜேர்மனியின் கோல்காப்பாளர் மனுவல் நோயர் தடுக்க, ஜேர்மனியின் ஒன்பதாவது பெனால்டியை ஜொனாஸ் ஹெக்டர் கோலாக்க 6-5 என்ற ரீதியில் வெற்றி பெற்ற ஜேர்மனி, அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

பெனால்டியில், இத்தாலி சார்பாக சிமோனே ஸாஸா, கிறஸ்சியான பெல்லே, லியனர்டோ பொனூச்சி, மத்தியோ தர்மியான் ஆகியோர் தவறவிட்டிருந்ததோடு, ஜேர்மனி சார்பாக தோமஸ் முல்லர், மெசூட் ஒஸில், பஸ்டியான் ஸ்வான்ஸ்டெய்கர் தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பெல்ஜியத்துடனான காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற வேல்ஸ், முதற்தடவையாக பெரிய தொடரொன்றின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதோடு, மற்றைய காலிறுதிப் போட்டியில், பெனால்டியில் போலந்தை தோற்கடித்து, அரையிறுதிப் போட்டிக்கு போர்த்துக்கல் தகுதி பெற்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .