2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

பொய்த்தது ஆய்வுகூடப் பரிசோதனை: குசாலின் தடை நீக்கம்

Shanmugan Murugavel   / 2016 மே 12 , மு.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தினார் என்ற சந்தேகத்தின்பேரில், இடைக்காலத்தடைக்கு உட்படுத்தப்பட்டிருந்த இலங்கை அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் குசால் பெரேரா, அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, அவர் மீதான இடைக்காலத்தடை நீக்கப்பட்டுள்ளதோடு, உடனடியாகவே போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட பதார்த்தமொன்று, அவரது உடலில் காணப்பட்டதாக, கட்டாரைச் சேர்ந்த ஆய்வுகூடமொன்று கடந்தாண்டு நவம்பரில் வழங்கிய அறிக்கையைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் சபையின் சுயாதீன மீளாய்வுச் சபையிடம் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதோடு, குசால் பெரேரா விளக்கமளிக்க வேண்டுமென அவர்கள் முடிவுசெய்தனர். இதன்படி டிசெம்பர் 7ஆம் திகதி, இடைக்காலத் தடைக்கு குசால் பெரேரா உட்படுத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, குசால் பெரேராவின் சட்டத்தரணிகள், சர்வதேச கிரிக்கெட் சபையுடன் இணைந்து, குறித்த ஊக்கமருந்து எவ்வாறு அவரது உடலுக்குள் உட்புகுந்திருக்கலாம் என்பது தொடர்பாக ஆராய்ந்தனர். இதன்காரணமாக, கட்டார் ஆய்வுகூடத்திலிருந்து மேலதிக தகவல்கள் கேரப்பட்டதோடு, 'பி" மாதிரிகளும் சோதிக்கப்பட்டன. அவற்றின் முடிவாகவும், ஊக்கமருந்து, அவரது உடலில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாகத் தொடர்ந்தும் ஆராய்ந்துவந்த குசால் பெரேராவின் சட்டத்தரணிகள், அவரது உடலுக்குள் எவ்வாறு சென்றிருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகளை, மிக அண்மைய கடிதத்தில் தெரிவித்ததோடு, அவரது உடலில் கண்டுபிடிக்கப்பட்ட பதார்த்தத்தை, குறித்த ஆய்வுகூடம், தவறாக அடையாளங்கண்டிருக்கலாம் என்ற வாதத்தையும் முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, சுயாதீன நிபுணரொருவரின் உதவி பெறப்பட்டு, கட்டாயம் ஆய்வுகூடத்தின் முடிவுகள் அராயப்பட்டன. இதன்போது, அவரது உடலில் காணப்பட்ட பதார்த்தத்தை, குறித்த ஆய்வுகூடம் சரியாக அடையாளங்கண்ட போதிலும், ஊக்கமருந்துப் பாவனை காரணமாகவே அது உடலில் காணப்பட்டது என்பதையும் தானாகவே அவரது உடலில் இயற்கையாக உருவாகியிருக்க முடியாது என்பதையும் நிரூபிக்க முடியாது என அறிவிக்கப்பட்டது. இந்தக் கருத்து, கட்டார் ஆய்வுகூடத்துக்கு அனுப்பப்பட்ட போது, தங்களது ஆய்வுகூட அறிக்கையை வாபஸ் பெற்றுக்கொண்ட குறித்த ஆய்வுகூடம், அதை வெறுமனே 'இயல்பற்ற கண்டுபிடிப்பு" என மாற்றியது. அத்தோடு, மேலதிக சோதனைகள் தேவைப்படவில்லை எனவும் அறிவித்தது.

இவற்றின் காரணமாக, குசால் பெரேரா மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மீளப்பெறுவதாக அறிவித்துள்ள சர்வதெச கிரிக்கெட் சபை, எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி, உடனடியாகவே அவரால் போட்டிகளில் பங்குபற்ற முடியுமென அறிவித்துள்ளது.

அத்தோடு, இந்தத் தவறான நிலைமையால், குசால் பெரேராவுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும், சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார். அத்தோடு, குசால் பெரேராவும் சட்ட அணியின் திறமையாலும், உண்மையைக் கண்டறிவதற்கான சர்வதேச கிரிக்கெட் நோக்கத்தாலுமே, உண்மையைக் கண்டறிய முடிந்ததாகவும் அறிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .