2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ்: சம்பியனாகி சாதனை படைத்தார் ஜோக்கோவிச்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 05 , பி.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சம்பியனாகி, வரலாற்றில் இடம்பிடித்தார். பிரித்தானியாவின் அன்டி மரேயைத் தோற்கடித்தே, இப்போட்டியில் அவர் சம்பியன் பட்டம் வென்றார்.

பிலிப்பே சார்ட்டியர் ஆடுகளத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், ஆரம்பத்தில் தடுமாற்றத்தை வெளிப்படுத்திய ஜோக்கோவிச், உலகின் இரண்டாம் நிலை வீரரான அன்டி மரேயிடம் முதலாவது செட்டை 3-6 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்தார்.
எனினும், அடுத்த செட்களில் அதிரடியான ஆட்டத்தை, ஜோக்கோவிச் வெளிப்படுத்தினார். இரண்டாவது செட்டை 6-1 என்ற புள்ளிகள் கணக்கிலும் மூன்றாவது செட்டை 6-2 என்ற புள்ளிகள் கணக்கிலும் வென்றார். தீர்மானமிக்க மூன்றாவது செட்டில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோக்கோவிச், 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று, சம்பியன் பட்டத்தை வென்றார்.

இதற்கு முன்னர் 3 தடவைகள், பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்த ஜோக்கோவிச், தனது முதலாவது பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை வென்றார். அத்தோடு, பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் வரலாற்றில், நான்கு முறை இறுதிப் போட்டியைத் தோற்றவர் என்ற மோசமான வரலாற்றையும், ஜோக்கோவிச் தவிர்த்துக் கொண்டார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, கிரான்ட் ஸ்லாம் போட்டிகளான பிரெஞ்சுப் பகிரங்கத் தொடர், அவுஸ்திரேலியப் பகிரங்கத் தொடர், ஐக்கிய அமெரிக்கப் பகிரங்கத் தொடர், விம்பிள்டன் தொடர் ஆகிய நான்கு வகையான போட்டிகளினதும் சம்பியன் பட்டத்தை, ஒரே நேரத்தில் கொண்டிருந்த பெருமையை, ஜோக்கோவிச் பெற்றுக் கொண்டார். இவ்வாறு, நான்கு பட்டங்களையும் ஒரே நேரத்தில் கொண்டிருந்த, மூன்றாவது நபர் இவராவார். இதற்கு முன்னர், டொன் பட்ஜ், றொட் லவெர் ஆகியோரே, இந்தப் பெருமையைக் கொண்டிருந்தனர்.

இதுவரை 12 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோக்கோவிச், பகிரங்க யுகத்தில், அதிக பட்டங்களைக் கொண்ட நான்காவது வீரராக மாறினார். முதலிடத்தில் 17 பட்டங்களோடு ரொஜர் பெடரரும் 14 பட்டங்களோடு பீற் சாம்ப்ராஸூம் ரபேல் நடாலும் இரண்டாவது இடத்திலும் காணப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .