2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

பிறீமியர் லீக் பட்டத்தை வென்றது லெய்செஸ்டர் சிற்றி

Shanmugan Murugavel   / 2016 மே 03 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் போட்டிகளில், டொட்டென்ஹாம் ஸ்பர்ஸ், செல்சி ஆகிய அணிகளுக்கிடையில் கடந்த திங்கட்கிழமை (02) இடம்பெற்ற போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், பிறீமியர் லீக் பட்டத்தை லெய்செஸ்டர் சிற்றி கைப்பற்றியுள்ளது.

கடந்த பருவகாலத்தில் பிறீமியர் லீக்கிலிருந்து ஏறத்தாள வெளியேறும் நிலையிலிருந்த லெய்செஸ்டர் சிற்றி, இந்தப் பருவகாலத்தின் ஆரம்பத்தில், பிறீமியர் லீக் பட்டத்தை அவ்வணி கைப்பற்றுவதற்கான வாய்ப்பு, 5,000-1 என்ற நிலையிலிருந்து தற்போது பிறீமியர் லீக் பட்டத்தை வென்றமையானது  விளையாட்டு வரலாற்றின் சிறந்ததோறு தருணமாகக் கருதப்படுகிறது.

இந்தப் பருவகாலத்தில் மூன்று பிறீமியர் லீக் போட்டிகளில் மாத்திரமே லெய்செஸ்டர் சிற்றி தோல்வியடைந்ததுடன், பிறீமியர் லீக் பட்டத்துக்கான நெருங்கிய போட்டியாளர்களான டொட்டென்ஹாம் ஸ்பர்ஸ், ஆர்சனல், மன்செஸ்டர் சிற்றி, மன்செஸ்டர் சிற்றி, கடந்த பருவகால சம்பியன்களான செல்சி ஆகியவற்றை விட தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தது.

தாய்லாந்தின் கோடீஸ்வரரான விஷாய் ஸ்ரீவத்தனபிரபாஹ்வால் ஆளப்படுகின்ற லெய்செஸ்டர் சிற்றிக்கு இதுவே முதலாவது பிறீமியர் லீக் பட்டம் என்பதோடு முதற்தடவையாக ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே சம்பியன்ஸ்லீக்கின் குழுநிலைப் போட்டிகளுக்கும் தகுதி பெற்றுள்ளது.  

பிறீமியர் லீக் பட்டத்தை லெய்செஸ்டர் சிற்றி வெல்வதற்கு, 2012ஆம் ஆண்டு ஒரு மில்லியன் ஸ்டேர்லிங் பவுன்ஸ்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட முன்களவீரரான ஜேமி வர்டியும் 2014ஆம் ஜனவரி மாதம், 400,000 ஸ்டேர்லிங் பவுன்ஸ்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட றியாட் மஹ்றேஸூமே முக்கியமான காரணமாக விளங்குகின்றனர்.

இதேவேளை முக்கியமான சுவாரஷ்யமான தரவாக, லெய்செஸ்டர் சிற்றி அணியின் வழமையான விளையாடும் பதினொருவர் குழாமுக்காக 22 மில்லியன் ஸ்டேர்லிங் பவுன்ஸ்களே செலவிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது, தமது வழமையான விளையாடும் பதினொருவர் அணிக்காக அதிகம் செலவிடுகின்ற மன்செஸ்டர் சிற்றியின் தொகையினது பத்திலொரு மடங்கினை விட குறைவானதாகும். தனது வழமையான விளையாடும் பதினொருவர் அணிக்காக மன்செஸ்டர் சிற்றி 281 மில்லியன் ஸ்டேர்லிங் பவுன்ஸ்களை செலவழிக்கின்றது. மேலுமொரு சுவாரஷ்யமான தரவாக, லெய்செஸ்டர் சிற்றி அணியின் சாதனை ரீதியிலான ஒப்பந்தமாக 8 மில்லியன் ஸ்டேர்லிங் பவுன்ஸ்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட லியனார்டோ உல்லோவா, மாற்று வீரராகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது லெய்செஸ்டர் சிற்றி பிறீமியர் லீக் பட்டத்தை வென்றுள்ளமையால், பிறீமியர் லீக் பரிசுப் பணம், சம்பியன்ஸ் லீக்கில் பங்கேற்பதற்கான பணம், அனுமதிச்சீட்டு, விருந்தோம்பல் என்பதன் மூலம் போட்டி நாளில் கிடைக்கவுள்ள அதிகரிக்கப்பட்ட வருமானம் உள்ளடங்கலாக ஏறத்தாள 150 மில்லியன் ஸ்டேர்லிங் பவுன்ஸ்களை பெறும் என தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .