2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

பிலிப் ஹியூஸின் மரணம்: 'அம்புலன்ஸின் தாமதத்தால் பிரச்சினையில்லை'

Shanmugan Murugavel   / 2016 மே 11 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலையில் பந்து தாக்கியதன் காரணமாக, 2014ஆம் ஆண்டு உயிரிழந்த அவுஸ்திரேலிய அணியின் வீரர் பிலிப் ஹியூஸின் மரணத்துக்கு, தாமதமாக வந்த அம்புலன்ஸ் காரணமன்று என, அவரது மரணம் தொடர்பாக ஆராய்வதற்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்ட சுயாதீன மீளாய்வுக்குழு தெரிவித்துள்ளது.

தெற்கு அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நியூ சௌத் வேல்ஸ் அணிக்காகத் துடுப்பாடிக் கொண்டிருந்த பிலிப் ஹியூஸ், வேகப்பந்து வீச்சாளரொருவர் வீசிய பந்தால் தலையில் தாக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர், தனது 26ஆவது வயதில் நவம்பர் 27ஆம் திகதி மரணமடைந்திருந்தார்.

அவரது தலையில் பந்து தாக்கியதன் பின்னர், மைதானத்துக்குள் அம்புலன்ஸ் வருவதற்கு 20 நிமிடங்கள் எடுத்திருந்த போதிலும், அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக, அந்தத் தாமதம், அவரது மரணத்தில் தாக்கம் செலுத்தியிருக்கவில்லை என அறிவிக்கப்படுகிறது.

அத்தோடு, அவர் அப்போது அணிந்திருந்த தலைக்கவசம், அப்போதைய நியமங்களுக்கு அமைவாகவே இருந்ததாகவும், எனினும், பந்து அவரது பின்தலைக்கழுத்துப் பகுதியைத் தாக்கிய இடத்தை வைத்துப் பார்க்கும்போது, தற்போதைய நவீன தலைக்கவசங்களால் கூட, அவரைக் காப்பாற்றியிருக்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துகளுக்கு மேலாக, சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, வேகப்பந்து வீச்சு அல்லது மத்திம வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும் அனைத்துத் துடுப்பாட்ட வீரர்களும், தலைக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டுமெனவும் விக்கெட்டுக்கு அருகில் விக்கெட் காப்பாளர் நிற்கும்போது, தலைக்கவசம் அணிய வேண்டுமெனவும், துடுப்பாட்ட வீரருக்கு அருகில் நிற்கும் களத்தடுப்பாளர்களும், தலைக்கவசங்களைக் கட்டாயம் அணிய வேண்டுமெனவும், இந்த மீளாய்வு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .