2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

பட்டத்தை கைப்பற்றியது ட்ரினிடாட் அன்ட் டொபாக்கோ

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 24 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத்தீவுகளின் உள்ளூர் 50 ஓவர்கள் போட்டித் தொடரான நஜிகோ சுப்பர்50இன் பட்டத்தை ட்ரினிடாட் அன்ட் டொபாக்கோ கைப்பற்றியுள்ளது. இறுதிப் போட்டியில் பார்படோஸைத் தோற்கடித்தே, அவ்வணி பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பார்படோஸ், முதலில் ட்ரினிடாட் அன்ட் டொபாக்கோவைத் துடுப்பெடுத்தாடப் பணித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ட்ரினிடாட் அன்ட் டொபாக்கோ, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, டரன் பிராவோ 97, கைல் ஹோப் 34, அணித்தலைவர் ஜேஸன் மொஹம்மட் 31 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் பார்படோஸ் அணி சார்பாக கார்லோஸ் பிராத்வெயிட் 2, டிவெயின் ஸ்மித், அஷ்லி நேஸ், சுலைமான் பென், அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பார்படோஸ், 42.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 72 ஓட்டங்களால் தோல்வியயடைந்தது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக ஷை ஹோப் 50, கார்லோஸ் பிராத்வெயிட் 46 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், ட்ரினிடாட் அன்ட் டொபாக்கோ சார்பாக ரயாத் எம்ரித் 3, ஜோன்-ருஸ் ஜக்கேசர், மார்லோன் ரிச்சட்ஸ், அகீல் ஹொசெய்ன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக ட்ரினிடாட் அன்ட் டொபாக்கோவின் டரன் பிராவோ தெரிவானார்.  

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .