2026 ஜனவரி 17, சனிக்கிழமை

பாகிஸ்தானுக்கெதிரான தொடரைச் சமப்படுத்திய இலங்கை

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 12 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை சமப்படுத்தியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை பாகிஸ்தான் வென்றதுடன், இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டிருந்த நிலையில், தம்புள்ளயில் ஞாயிற்றுக்கிழமை (11) நடந்த மூன்றாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே 1-1 என்ற ரீதியில் தொடரை இலங்கை சமப்படுத்தியது.

மழை காரணமக 12 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் சல்மான் அக்ஹா, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார். பாகிஸ்தான் சார்பாக விக்கெட் காப்பாளர் கவாஜா நஃபே அறிமுகத்தை மேற்கொண்டார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, அணித்தலைவர் தசுன் ஷானகவின் 34 (09), குசல் மென்டிஸின் 30 (16), ஜனித் லியனகேயின் ஆட்டமிழக்காத 22 (08), தனஞ்சய டி சில்வாவின் 22 (15), சரித் அசலங்கவின் 21 (13), கமில் மிஷாரவின் 20 (08) ஓட்டங்களோடு 12 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பந்துவீச்சில் மொஹமட் நவாஸ் 1-0-8-1, ஷடாப் கான் 2-0-19-0, அப்ரார் அஹ்மட் 2-0-22-0, நசீம் ஷா 3-0-35-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 161 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் சார்பாக அக்ஹா 45 (12), நவாஸ் 28 (15), நஃபே 26 (15) ஓட்டங்களைப் பெற்றபோதும் வனிது ஹசரங்க (4), மதீஷ பத்திரணவிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 12 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களையே பெற்று 14 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் வனிது ஹசரங்க தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X