2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

மீண்டு(ம்) வருவாரா ஷரபோவா?

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 09 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடைசெய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியமைக்காக இரண்டு ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான மரியா ஷரபோவா, டென்னிஸ் போட்டிகளில் மீண்டு வருவாரா என்பது கேள்வியாக மாறியுள்ளது.

இவ்வாண்டு இடம்பெற்ற அவுஸ்திரேலியப் பகிரங்க டென்னிஸ் தொடரின்போதும் (ஜனவரி 26, 2016) தொடருக்குப் பின்னர் மொஸ்கோவில் வைத்தும் (பெப்ரவரி 2, 2016) சேகரிக்கப்பட்ட மாதிரிகளில், தடைசெய்யப்பட்ட மருந்தான மெல்டோனியத்தை அவர் உட்கொண்டிருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மார்ச் மாதத்திலிருந்து அவர் இடைக்காலத் தடைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, அவருக்கான 2 ஆண்டுகள் தடை, ஜனவரி 26ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 29 வயதான ஷரபோவா, தடை முடிவடையும் போது 31ஆவது வயதை நெருங்கியிருப்பார். உலகின் முதல்நிலை வீராங்கனையாக தற்போது இருக்கும் செரினா வில்லியம்ஸூக்கு இப்போது 34 வயதெனும் போது, 31 வயதென்பது சிறியதாகவே தென்படுகின்ற போதிலும், செரினா வில்லியம்ஸ் என்பவர், விசேடமான ஒருவராகக் காணப்படுகிறார். எல்லோராலும், அவரளவுக்கு, வயதை எதிர்த்துத் தனது திறமைகளை வெளிப்படுத்த முடியுமெனக் கருதப்படவில்லை.

உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையும் போட்டி விமர்சகருமான கிறிஸ் எவேர்ட், இத்தடையுடன் ஷரபோவின் எதிர்காலம் முடிவடைந்துவிட்டதாகக் கருதுகிறார். 'அவரால் திரும்பி வரமுடியுமென நான் நினைக்கவில்லை. வீரர்கள், தொடர்ந்தும் மேம்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கான வேலைப்பளுக்கள், பயிற்சி ஆகியன, கடினமாகியே வருகின்றன" என்றார். மேலும் தெரிவித்த அவர், 'நான் மிகவும் ஆச்சரியப்படுவேன். அவர் திரும்பி வந்தால், நான் மிகவும் ஆச்சரியப்படுவேன்" என்றார்.

எனினும், இரட்டையர் பிரிவுகளில் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான பாம் ஷ்ரிவெர், அவரது கருத்துக்கு மாறுதலான கருத்தை வெளிப்படுத்தினார். 'அந்த ஒன்றரை ஆண்டுகாலப் பகுதியை, அவர் எவ்வாறு செலவிடுகிறார் என்பதில் ஏராளமானது தங்கியுள்ளது என நான் நினைக்கிறேன். தடை முடிவடையும் போது, அவருக்கு 30 வயதாகியிருக்கும். எல்லா டென்னிஸ் வீரர்களையும் கவனித்தீர்களானால், தங்களுடைய சிறப்பான டென்னிஸை, 30 தொடக்கம் 35 வயதுவரையிலான காலப்பகுதியில் விளையாடுகிறார்கள். இரண்டு ஆண்டுகள் தடையென்பது, ஷரபோவாவுக்கு மிகவும் கடுமையானது. ஆனால், அதை அவர் எவ்வாறு செலவிடுவார் என்பதை நான் அறிய விரும்புகிறேன்" என்றார்.

தனக்குக் காணப்படும் சுகாதாரப் பிரச்சினைகள் காரணமாக, 2006ஆம் ஆண்டிலிருந்து அந்த மருந்தை உட்கொண்டு வந்ததாகவும், இந்த ஆண்டே அது தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்ட நிலையில், அதைக் கவனிக்க மறந்திருந்ததாகவும் தெரிவிப்பதோடு, போட்டியில் அனுகூலத்தைப் பெறுவதற்காக அதைப் பயன்படுத்தியிருக்கவில்லையெனவும் தெரிவித்து வருகிறார்.

அவரது தடையை விசாரித்த தீர்ப்பாயமும், அவர் ஏமாற்றுவதற்காக அதை உட்கொண்டிருக்கவில்லை என்பதை ஏற்றுக் கொண்டது. இதன் காரணமாக, தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தடை, மிக அதிகமானது என ஷரபோவா கருதுவதோடு, அதற்கெதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், முன்னாள் முதல்நிலை வீராங்கனையான லின்ட்ஸே டேவென்போர்ட், அதை ஏற்க மறுத்தார். என்னென்ன மருந்துகளை உள்ளெடுக்கிறார் என்பதை, ஷரபோவா வெளிப்படுத்தாமை, அவரது அப்பாவித்தனத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது எனத் தெரிவித்தார்.

'என்னைப் பொறுத்தவரை, அவரது வெளிப்படுத்தல் படிவங்கள், அவரது அப்பாவித்தனம், நோக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்துமென நினைக்கிறேன். அந்தப் படிவங்களை அடிக்கடி நிரப்பியவர் என்ற முறையில், உங்கள் உடலுக்குள் எதை உள்ளெடுக்கிறீர்கள் என்பதை அது கேட்கிறது. நோய்க் குறைப்பு மருந்துகள் தொடக்கம் விற்றமின்கள் தொடக்கம் குடும்பக் கட்டுப்பாடுகள் மருந்துகள் வரை அனைத்தையும் குறிப்பிட வேண்டும். அவர் தனது மருந்துகளைக் குறிப்பிடவில்லையென்பது, என்னைப் பொறுத்தவரை குற்றவாளியென் காட்டுகிறது" என்றார்.

ஷரபோவாவால் மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்ற முடியுமா எனக் கேட்கப்பட்டமைக்கு, அவரது தடையின் காலத்தைப் பொறுத்தது அது எனவும், இரண்டு ஆண்டுகள் தடையென்பது மேன்முறையீட்டின் பின்னரும் உறுதிப்படுத்தப்பட்டால், அவர் மீண்டும் திரும்புவாரென நினைக்கவில்லையெனவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .