Shanmugan Murugavel / 2016 ஜனவரி 17 , மு.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தைப் பிடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த முதலிடத்தைத் தக்க வைத்துக்கொள்ள, கடுமையான சவாலை எதிர்கொள்ளவுள்ளது.
உலகின் முதல்நிலை அணியாகக் காணப்பட்ட தென்னாபிரிக்க அணி, இதற்கு முன்னர் இந்தியாவில் வைத்து இடம்பெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்ததோடு, தற்போது தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுவரும் 4 போட்டிகள் கொண்ட, இங்கிலாந்துக்கெதிரான தொடரில் 3 போட்டிகளின் பின்னர் 0-2 என்ற கணக்கில் அத்தொடரை இழந்துள்ளது. இதனால், தனது முதலிடத்தை அவ்வணி இழந்துள்ளதோடு, அடுத்த போட்டியில் வெற்றிபெற்றாலும், முதலிடத்தை மீளப்பெற முடியாத நிலை காணப்படுகிறது.
இதன் காரணமாக, டெஸ்ட் தரப்படுத்தலின் முதலிடத்தை இந்தியா கைப்பற்றியுள்ளதோடு, தென்னாபிரிக்க அணி 3ஆவது இடத்திலேயே காணப்படவுள்ளது. அவுஸ்திரேலிய அணி, 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர், தரப்படுத்தலில் முதலிடத்தை இந்தியா அடைந்துள்ள முதற்தடவை இதுவாகும். ஆனால், இது, நிலைத்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.
அவுஸ்திரேலிய அணி, அடுத்த மாதத்தில் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்குபற்றவுள்ளது. இத்தொடரை, 1-0 என்ற கணக்கில் கைப்பற்றினாலேயே, தரப்படுத்தலின் முதலிடத்தை, அவுஸ்திரேலியா அடைந்து கொள்ளும். எனவே, இந்தியாவின் முதலிடத்துக்கு ஆபத்து இருப்பதாகவே கருதப்படுகிறது.
அவுஸ்திரேலிய அணி அவ்வாறு வெற்றிபெறுமாயின், அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ், சிம்பாப்வே என, டெஸ்ட் தரப்படுத்தல் அமையும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .