2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளை வென்றது அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 06 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள், கரீபியத் தீபகற்பத்தில் பங்கேற்றுவரும் முக்கோணச் சுற்றுத் தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் கயானாவில் இடம்பெற்ற போட்டியில், நாணயச்சுழற்சியில்  வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார்.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 32.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஜோன்சன் சார்ள்ஸ், கார்லோஸ் பிராத்வெயிட், டரன் பிராவோ, டினேஷ் ராம்டீன் ஆகியோர் முறையே 22, 21, 19, 12 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக அடம் ஸாம்பா, நேதன் லைன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் நீண்ட நாளைக்கு பின்னர் சர்வதேசப் போட்டிகளுக்கு திரும்பிய மிற்செல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளையும் கிளென் மக்ஸ்வெல், மிற்செல் மார்ஷ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 117 ஓட்டங்களை வெற்றியிலக்காக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 25.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக டேவிட் வோணர் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் உஸ்மான் காவாஜா 27 ஓட்டங்களையும் ஆரோன் பின்‌ஞ் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில், மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக சுனில் நரைன் இரண்டு விக்கெட்டுகளையும் சுலைமான் பென், ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக நேதன் லைன் தெரிவானார். தொடரின் மூன்றாவது போட்டியில், அவுஸ்திரேலியாவும் தென்னாபிரிக்கவும் இலங்கை நேரப்படி நாளை இரவு 10.30மணிக்கு மோதவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .