2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

மனம் இன்னும் சென்னையிலேயே

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 16 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் தொடர், 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக மாத்திரமன்றி, சென்னையைச் சேர்ந்த ஒருவர் போலவே மாறியிருந்த இந்தியாவின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தலைவர் மகேந்திரசிங் டோணி, தற்போது புதிய சவாலை எதிர்கொள்கிறார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான குருநாத் மெய்யப்பன், சூதாடினார் என்ற குற்றச்சாட்டில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, இரண்டு வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

அண்மையில் இடம்பெற்ற ஏலத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணிக்குத் தெரிவுசெய்யப்பட்ட டோணி, அதன் தலைவராகவும் அறிவிக்கப்பட்டார். அவ்வணியின் சீருடையை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட டோணி, சென்னை சுப்பர் கிங்ஸ் தொடர்பாகவும், புதிய அணி தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்தார்.

எட்டு வருடங்களாகப் பிரதிநிதித்துவப்படுத்திய அணியை விட்டு, வேறு அணியில் விளையாடுவது பற்றிக் கருத்துத் தெரிவித்த அவர், 'அங்கிருந்து நான் முழுவதுமாக மாறிவிட்டேன் என்று தெரிவித்தால், நான் பொய் சொல்கிறேன். மனிதர்களாக இருப்பதில் விசேட அம்சம் அது தான். (சென்னை சுப்பர் கிங்ஸூடன்) எட்டு வருடங்களின் பின்னர், அதனுடன் உணர்வுரீதியான தொடர்பொன்று இருக்கும். எட்டு வருடங்கள் ஐ.பி.எல்-இல் (சென்னைக்காக) விளையாடிய பின்னர், வேறு அணிக்காக விளையாடுவது வித்தியாசமாக இருக்கும்" என்றார். திடீரென நீங்கள், புதிய அணிக்காக விளையாடுவது குறித்து ஆர்வமாக இருக்கிறேன், சென்னை சுப்பர் கிங்ஸூக்கும் அதன் இரசிகர்களுக்கும், அவர்கள் காட்டிய அன்புக்கும் விருப்புக்கும் நன்றியுணர்வு காட்டக்கூடாது என்று சொன்னால், அது தவறாக இருக்கும்" என்றார்.

எனினும், தன்னைத் தெரிவு செய்தமைக்காக பூனே அணிக்கு நன்றி தெரிவித்த அவர், தொழில்முறைக் கிரிக்கெட் வீரராக, 100 சதவீதத்துக்கும் அதிகமான அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டியுள்ளதாகவும், அதனைச் செய்ய முயல்வதாகவும் தெரிவித்தார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரராக ஆரம்பத்திலும், பின்னர் பயிற்றுநராகவும் தொடர்ந்த ஸ்டீபன் பிளமிங், பூனே அணியின் பயிற்றுநராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் இணைந்து பணியாற்றுவது இலகுவானது எனத் தெரிவித்த அவர், பிளமிங் சிறந்ததொரு பயிற்றுநர் எனவும் அவரது முகாமைத்துவத் திறன்கள் சிறப்பானவை எனவும் தெரிவித்தார்.

சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பிரென்டன் மக்கலம் போன்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் பூனே அணியில் இல்லாத நிலையில், அவர்களின் இன்மையை உணர்வார் எனத் தெரிவித்த டோணி, எனினும் புதிய அணியின் சிறந்த வீரர்கள் உள்ளார்கள் எனவும், அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வத்துடன் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய வீரரான கெவின் பீற்றர்சன், பூனே அணியிலேயே இடம்பெற்றுள்ள நிலையில், அவர் தொடர்பாகக் கேட்டமைக்கு, 'ஒவ்வொரு வீரருக்கும், அணியில் ஒவ்வொரு பங்கு இருக்கும். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் விளையாடும் அடிப்படையொன்று உள்ளது. கெவின் பீற்றர்சன் மிகவும் அற்புதமானவர். அவர், ஆக்ரோஷமானவர் என்பதோடு, களத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியவர். அது மாத்திரமல்லாது, ஏனைய சிரேஷ்ட வீரர்களைப் போலவே, இளைய வீரர்களை வழிப்படுத்தும் மேலதிக பொறுப்பும் அவருக்கு உள்ளது" என்று தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .