2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

யுனைட்டெட்டுடன் புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் ரஷ்ஃபோர்ட்

Shanmugan Murugavel   / 2016 மே 31 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்செஸ்டர் யுனைட்டெட்டின் 18 வயதான முன் கள வீரரான மார்க்கஸ் ரஷ்ஃபோர்ட் புதிய ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளார். இதன் காரணமாக, 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இவர் மன்செஸ்டர் யுனைட்டெட் அணியிலேயே நீடிக்கவுள்ளார். இவரின் புதிய ஒப்பந்தமானது வாரமொன்றுக்கு 20,000 ஸ்டேர்லிங் பவுண்ஸ்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பெப்ரவரி மாதம், மிட்ஜிலண்ட் அணியுடனான போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முதல் அணியின் அறிமுகத்தை மேற்கொண்ட ரஷ்ஃபோர்ட், அப்போட்டியில் இரண்டு கோல்களைப் பெற்றிருந்ததுடன், இந்தப் பருவகாலத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்காக 18 போட்டிகளில் விளையாடி எட்டு கோல்களைப் பெற்றிருந்தார்.

தன்னை நிரூபிக்க சந்தர்ப்பம் கிடைத்தமையையடுத்து நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று தெரிவித்த ரஷ்ஃபோர்ட், உலகத்திலுள்ள மிகப்பெரிய கழகத்தில் கால்பந்தாட்டத்தை ஆட முடிவதே, தனக்கும் தனது குடும்பத்துக்கும் எல்லாமே என மேலும் தெரிவித்துள்ளார்.

யூரோ 2016க்கான 26 பேர் கொண்ட இங்கிலாந்துக் குழாமில் இடம்பிடித்துள்ள ரஷ்ஃபோர்ட், இங்கிலாந்துக்கான தனது அறிமுகப் போட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை (27), அவுஸ்திரேலியாவுக்கெதிராக கோலைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .