2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

யுனைட்டெட் வீரர்கள் மீதான தாக்குதல்: இரசிகர்களுக்கு ஆயுள் தடை விதிக்கப்படுமென்கிறது வெஸ்ட் ஹாம்

Shanmugan Murugavel   / 2016 மே 11 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெஸ்ட் ஹாம் அணிக்கெதிரான போட்டியில் பங்குபற்றுவதற்காக, போலியன் விளையாட்டரங்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் பஸ் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு, ஆயுள் தடை விதிக்கப்படுமென, வெஸ்ட் ஹாம் கழகம் அறிவித்துள்ளது.

மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் பஸ் சென்றுகொண்டிருக்கும் போது, போத்தல்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன்போது, பஸ்ஸூக்கு சிறியளவு சேதம் ஏற்பட்டிருந்தது. அத்தோடு, அங்கு கூடியிருந்த பொதுமகன் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதல் நடந்துகொண்டிருக்கும் போது, பஸ்ஸூக்குள் காணப்பட்ட மன்செஸ்டர் யுனைட்டெட் வீரர்கள், அந்தத் தாக்குதலின் காணொளிகளை, சமூக ஊடக இணையத்தளங்களில் பகிர்ந்திருந்தனர். இந்தத் தாக்குதல் தவிர, போட்டி இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, யுனைட்டெட் அணியின் கோல் காப்பாளர் டேவிட் டி கியா மீது, வெஸ்ட் ஹாம் இரசிகர்களால் பொருட்கள் வீசப்பட்டிருந்தன.

இவ்விடயங்கள் தொடர்பான முழுமையான பொலிஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ள வெஸ்ட் ஹாம் அணி, இவற்றில் சம்பந்தப்பட்டவர்களுக்கு, ஆயுள் காலத்துக்கும் போட்டிகளைப் பார்வையிடுவதற்குத் தடை விதிக்கப்படுமென அறிவித்துள்ளது. அத்தோடு, போட்டியின் போது கோல் காப்பாளர் மீதான தாக்குதல் முயற்சி தொடர்பாக, கால்பந்தாட்டச் சம்மேளனமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தோல்விக்குக் காரணம் இதுவல்ல

இந்தப் போட்டியில் யுனைட்டெட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த நிலையில், போட்டிக்கு முன்பாக, யுனைட்டெட்டின் பஸ் மீதான தாக்குதலை, தோல்விக்கான காரணமாகக் கூறுவதற்கு, அவ்வணியின் முகாமையாளர் வான் கால் மறுத்துவிட்டார்.

தோல்விக்கு, பஸ் தாக்குதலைக் காரணமாகக் கூறுவது, வெறுமனே சாக்குப் போக்காக அமைந்திருக்குமெனத் தெரிவித்த அவர், எனினும், இளைய வீரர்களை அது பாதித்திருக்கலாமென்பதை ஏற்றுக் கொண்டார்.

இந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும் கூட, முதல் 4 அணிகளுள் ஒன்றாக இத்தொடரை நிறைவுசெய்யும் வாய்ப்பு, மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்கு இன்னமும் இருப்பதாகத் தெரிவித்த அவர், கிறிஸ்டல் பலஸ் அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெற எதிர்பார்த்ததோடு, மன்செஸ்டர் சிற்றி அணிக்கெதிரான போட்டியில் ஸ்வான்சீ அணி, சிறப்பான போராட்டத்தை வழங்குமென எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .