2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யூரோ: விலகல் சுற்றில் போர்த்துக்கல், பிரான்ஸ், ஜேர்மனி

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 24 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூரோ கிண்ணத் தொடரின் விலகல் முறையிலான சுற்றுக்கு போர்த்துக்கல், பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெய்ன், சுவீடன் ஆகியன தகுதி பெற்றுள்ளன.

ஹங்கேரியில் இன்று அதிகாலை நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் போர்த்துக்கல், பிரான்ஸுக்கு இடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்த நிலையிலேயே இரண்டு அணிகளும் விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

போர்த்துக்கல் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றதோடு, பிரான்ஸ் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கரிம் பென்ஸீமா பெற்றிருந்தார்.

இப்போட்டி முடிவின் மூலம் பிரான்ஸ் குழுவில் முதலிடம் பெற்றதுடன், போர்த்துக்கல் மூன்றாமிடத்தை பெற்றிருந்தாலும், மேம்பட்ட மூன்றாமிடத்தை பெற்ற நான்கு அணிகளில் ஒன்றாக விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தது.

இதேவேளை, குறித்த போட்டியில் பெற்ற இரண்டு கோல்களின் மூலம் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் அதிக கோல்களைப் பெற்ற ஈரானி அலி டயேயின் 109 கோல்கள் என்ற சாதனையை ரொனால்டோ சமப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், ஜேர்மனியில் நடைபெற்ற அவ்வணிக்கும், ஹங்கேரிக்கும் இடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்த நிலையிலேயே, குழுவில் இரண்டாமிடம் பிடித்து விலகல் முறையிலான சுற்றுக்கு ஜேர்மனி தகுதி பெற்றிருந்தது. ஹங்கேரி தொடரிலிருந்து வெளியேறிருந்தது.

ஜேர்மனி சார்பாக, கை ஹவேர்ட்ஸ், லியோன் கொரெட்ஸ்கா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஹங்கேரி சார்பாக, அடம் ஸஸலாய், அன்ட்ரயாஸ் ஸ்காஃபர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், ஸ்பெய்னில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், ஸ்லோவாக்கியாவுக்கும் இடையிலான போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலம் விலகல் முறையிலான சுற்றுக்கு ஸ்பெய்ன் தகுதி பெற்றுள்ளது.

ஸ்பெய்ன் சார்பாக, அய்மரிக் லபோர்ட்டே, பப்லோ சரபியா, பெரன் டொரஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய இரண்டு கோல்களும் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.

இதேவேளை, ரஷ்யாவில் நடைபெற்ற போலந்துடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலம் விலகல் முறையிலான சுற்றுக்கு சுவீடன் தகுதி பெற்றுள்ளது. போலந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

சுவீடன் சார்பாக, எமில் பொர்ஸ்பேர்க் இரண்டு கோல்களைப் பெற்றதோடு, விக்டர் கிளாசென் ஒரு கோலைப் பெற்றிருந்தார். போலந்து சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் றொபேர்ட் லெவன்டோஸ்கி பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .