2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

றியோ ஒலிம்பிக்: கால்பந்தாட்ட காலிறுதியில் பிரேஸில்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் றியோ ஒலிம்பிக் போட்டிகளில், போட்டிகளை நடத்தும் நாடான பிரேஸில், கால்பந்தாட்டத்தின் காலிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளது. ஆரம்பத்தில் போதுமான திறமைகளை வெளிப்படுத்தியிருக்காத அவ்வணி, டென்மார்க் அணிக்கெதிரான போட்டியில் சிறப்பாகச் செயற்பட்டே, காலிறுதி வாய்ப்பை உறுதிசெய்தது.

குழு ‘ஏ”ஐச் சேர்ந்த பிரேஸில் அணி, தென்னாபிரிக்க அணிக்கெதிராக 0-0 எனவும் ஈராக் அணிக்கெதிராக 0-0 எனவும் போட்டி முடிவுகளைப் பெற்றதால், குழுவில் முதலிடத்தை வகித்த டென்மார்க் அணிக்கெதிரான போட்டியில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியே ஆக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்நிலையில், பிரேஸிலின் கப்ரியலின் இரண்டு கோல்கள், கப்ரியல் ஜீஸஸ், லுவான் ஆகியோரின் தலா ஒரு கோல் ஆகியவற்றின் துணையோடு, 4-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கைத் தோற்கடித்தது. இதையடுத்து, காலிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்ற பிரேஸில் அணி, 14ஆம் திகதி இடம்பெறவுள்ள போட்டியில், கொலம்பியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

நீச்சலில் சாதித்த இளைஞன்

நீச்சல் போட்டிகளில், ஆண்களின் 100 மீற்றர் பிறீஸ்டைல் போட்டிகளில் தங்கத்தை, அவுஸ்திரேலியாவின் பதின்ம வயது நட்சத்திரமாக மாறியுள்ள கைல் சால்மெர்ஸ் வெற்றிகொண்டார். 18 வயதேயான அவர், 47.58 செக்கன்களில்
அத்தூரத்தைக் கடந்தார். 1968ஆம் ஆண்டுமைக் வென்டென், தங்கம் வென்றமைக்குப் பிறது, 100 மீற்றர் நீச்சலில் தங்கம் வென்ற முதலாவது அவுஸ்திரேலியர் இவராவார்.

நீச்சலில் சாதித்த பெண்

நீச்சல் போட்டிகளில் சாதித்துவரும் அமெரிக்க அணி சார்பாக, 19 வயதான கேட்டி லெடெக்கி, தனது மூன்றாவது தங்கத்தைப் பெற்றுக் கொண்டார். பெண்களுக்கான 4*200 மீற்றர் பிறீஸ்டைல் அஞ்சல் நீச்சலிலேயே, அமெரிக்கா தங்கம் பெறுவதற்கு அவர் உதவினார். ஏற்கெனவே அவர், 200 மீற்றர், 400 மீற்றர் பிறீஸ்டைல் போட்டிகளில் அவர் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகத்தில் கோல்ப்

கோல்ப் போட்டிகள், இன்று மாலை முதல் இடம்பெற ஆரம்பித்தன. எனினும், முன்னணி வீரர்கள் இப்போட்டிகளில் பங்குபற்றாத நிலையில், அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் கோல்ப் போட்டிகளின் எதிர்காலம் குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன.

பிரேஸிலில் காணப்படும் சீகா அச்சம் காரணமாக, முன்னணி வீரர்களான ஜேஸன் டே, டஸ்டின் ஜோன்சன், ஜோர்டன் ஸ்பியெத், றோரி மக்லொரோய் ஆகியோட் உட்படப் பலர் பங்குபற்றியிருக்காத நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவின் தலைவர் தோமஸ் பச், அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் எந்த விளையாட்டுகள் இடம்பெற வேண்டுமென்பதைத் தீர்மானிப்பதற்கு, முக்கிய வீரர்களின் பங்குபற்றுகை அல்லது பங்குபற்றாமையும் முக்கிய காரணிகளில் ஒன்றாக அமையுமெனத் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .