Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியோ ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற்றுவரும் டென்னிஸ் போட்டிகளின் முதற்சுற்றில், நான்கு தடவைகள் ஒலிம்பிக் தங்கம் வென்ற அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார்.
பெல்ஜியத்தைச் சேர்ந்தவரும் உலகின் 62ஆவது நிலை வீராங்கனையுமான கேர்ஸ்டென் பிளிப்கென்ஸை எதிர்கொண்ட உலகின் 6ஆம் நிலை வீராங்கனையான வீனஸ், 4-6, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
வைரஸ் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்ட வீனஸ் வில்லியம்ஸ், போதியளவு உடற்றகுதியை வெளிப்படுத்தத் தவறியதோடு, அதுவே அவருக்கு எதிரானதாக அமைந்துகொண்டது.
முன்னதாக, உலகின் 5ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னிஸ்கா ரட்வன்ஸ்கா, 64ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் சாய்சாய் ஸெங்கிடம் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். நியூயோர்க்கில் போட்டிகளில் பங்குபற்றிவிட்டு, புதன்கிழமை இரவே பிரேஸிலுக்கு வந்த அக்னியஸ்கா, காலநிலை மாற்றத்துக்குப் பழக்கப்படுவதற்குப் போதிய நேரமில்லாத நிலையில், தடுமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இதேவேளை, ஆண்கள் இரட்டையர் போட்டிகளில் இந்தியாவின் றொஹான் போப்பன்னா, லியான்டர் பயேஸ் ஜோடி, போலந்தின் குபோட் லூகாஸ், மார்சின் மட்கொவ்ஸ்கி ஜோடியிடம் 4-6, 6-7 என்ற கணக்கில் தோல்வியடைந்திருந்தது. பெண்கள் இரட்டையர் போட்டிகளில் சானியா மிர்ஸா, பிரார்த்தனா தோம்பரே ஜோடி, சீனாவின் ஷூவாய் பெங், ஷூவாய் ஸாங் ஜோடியிடம் 6-7, 7-5, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago