2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

லா லிகா பட்டம்: இருமுனைப் போட்டியாகிய மும்முனைப் போட்டி

Shanmugan Murugavel   / 2016 மே 09 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகா தொடரின் பட்டத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி, இத்தொடரின் இறுதி வாரம் வரை சென்றுள்ளபோதும், கடந்த வாரம் வரை பார்சிலோனா, அத்லெட்டிகோ மட்ரிட், றியல் மட்ரிட் ஆகிய அணிகளுக்கிடையே மும்முனைப் போட்டியாக இருந்தது இந்த வாரத்தில் பரம வைரிகளான பார்சிலோனா, றியல் மட்ரிட் ஆகிவற்றுக்கிடையேயான இருமுனைப் போட்டியாக மாறியுள்ளது.

லா லிகா புள்ளிகள் தரவரிசையில் இறுதியாக உள்ள லெவண்டேயுடன் அத்லெட்டிகோ மட்ரிட் தோல்வியடைந்த நிலையிலும் எஸ்பன்யோலை பார்சிலோனாவும் வலென்சியாவை றியல் மட்ரிட்டும் வென்றுள்ள நிலையிலேயே மும்முனைக் களமாக இருந்த லா லிகா தொடருக்கான பட்டத்தை கைப்பற்றுவதற்கான போட்டி தற்போது இருமுனைக் களமாகியுள்ளது.

பார்சிலோனா, எஸ்பன்யோல் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 5-0 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா வெற்றி பெற்றது. பார்சிலோனா சார்பாக லூயிஸ் சுவாரஸ் இரண்டு கோல்களையும் லியனல் மெஸ்ஸி, நேமர், ரஃபின்கா ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களையும் பெற்றனர்.

றியல் மட்ரிட், வலென்சியா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-2 என்ற கோல்கணக்கில் றியல் மட்ரிட் வெற்றி பெற்றது. றியல் மட்ரிட் சார்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களையும் கரிம் பென்ஸீமா ஒரு கோலினையும் பெற்றனர்.

இந்நிலையில், கிரனெடா அணியுடன் எதிர்வரும் சனிக்கிழமை (14) இடம்பெறவுள்ள போட்டியில் பார்சிலோனா வெற்றி பெற்றால் அவ்வணி பட்டத்தை கைப்பற்றும். இல்லாவிடினும், மேற்படி போட்டியில் பார்சிலோனா தோற்றால், சமநிலையில் முடித்துக் கொண்டிருக்கும் நிலையில் றியல் மட்ரிட்டும் டீபோர்ட்டிவோ டீ லா கொரூனா அணியுடன் தோற்றாலோ, சமநிலையில் முடித்துக் கொண்டாலும் பார்சிலோனாவே பட்டம் வெல்லும். ஏனெனில், புள்ளிகள் சமநிலையில் வந்தால் றியல் மட்ரிட்டும் பார்சிலோனாவும் மோதிய போட்டிகளின் முடிவுகள் கணெக்கடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் பார்சிலோனாவே சிறப்பான பெறுபேறுகளைக் கொண்டுள்ளது.

இதேவேளை, அத்லெட்டிகோ மட்ரிட், லெவண்டே இடையேயான போட்டியில், 1-2 என்ற கோல்கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் தோல்வியைத் தளுவி பட்டத்தை வெல்லுவதற்கான வாய்ப்பையும் கோட்டை விட்டது. இப்போட்டியில் அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக பெறப்பட்ட கோலை பெர்னாண்டோ டொரேஸ் பெற்றிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .