2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

வேகப்பந்து வீச்சாளர்களில் பயிற்றுநருக்கு நம்பிக்கை

Shanmugan Murugavel   / 2016 மே 05 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

முழுமையான தொடரொன்றில் விளையாடுவதற்காக இலங்கை அணி, இங்கிலாந்தைச் சென்றடைந்துள்ள நிலையில், இலங்கை அணியின் வெற்றிவாய்ப்புகள் குறித்த கேள்விகள் காணப்படுகின்றன. எனினும், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் நம்பிக்கையிருப்பதாக, இலங்கை அணியின் பயிற்றுநர் கிரஹம் போர்ட் தெரிவித்துள்ளார்.

குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோரின் ஓய்வின் பின்னர், இலங்கை அணி தடுமாறி வந்துள்ளதோடு, அவ்வணி வழக்கமாகத் தடுமாறும் நாடான இங்கிலாந்தில், அவ்வணி இன்னும் அதிகமாகத் தடுமாற வேண்டியேற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இலங்கைக்குச் சென்றுள்ள குழாமில் இடம்பெற்ற 17 வீரர்களில் 11 பேர், 2014ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இடம்பெற்ற தொடரில் பங்குபற்றியதோடு, முக்கிய வீரர்களான அஞ்சலோ மத்தியூஸ், ரங்கன ஹேரத் ஆகியோரும் அங்கு செல்கின்றனர்.

வேகப்பந்து வீச்சாளர்களாகச் செயற்பட்ட தம்மிக்க பிரசாத், நுவான் பிரதீப், ஷமின்ட எரங்க மூவரும், இலங்கை அணி வெற்றிபெற்ற அந்த டெஸ்ட் தொடரில் பங்குபற்றியதோடு, சுரங்க லக்மால், அந்தத் தொடருக்காகச் சேர்க்கப்பட்டிருந்த போதிலும், உபாதை காரணமாக நாட்டுக்குத் திரும்பிருந்தார். மற்றையவரான துஷ்மந்த சமீர, இலங்கை சார்பாக அண்மைக்காலத்தில் விளையாடிய மிகத்திறமையாக வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படுகிறார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த போர்ட், 'பயன்தரக்கூடிய பந்துவீச்சு வரிசையாக மாறியுள்ள பந்துவீச்சுக் குழாமொன்றை நாம் கொண்டிருக்கிறோம் என நான் நினைக்கிறேன். இங்கிலாந்துக் களநிலைமைகளில் வெற்றியை, அவர்களனைவரும் பெற்றுள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.

துடுப்பாட்ட வீரர்களில், சிரேஷ்ட வீரர்களை இழந்துள்ள நிலையில், சில இளைய வீரர்களால் சிறப்பாக விளையாட முடியுமெனத் தெரிவித்த அவர், கடந்த சில வாரங்களாக அவர்கள், மிகவும் கடினமாகப் பணியாற்றியதாகத் தெரிவித்தார். குறிப்பாக, இங்கிலாந்தில் இருக்கக்கூடிய ஆடுகளங்களைப் போன்ற ஆடுகளங்களில், கொழும்பில் வைத்துப் பயிற்சிகளில் ஈடுபட்டமை அதிர்ஷ்டகரமானது என அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .