2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

விடைபெற்றார் மார்ட்டின் குரோ - 1962-2016

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 03 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அந்நாட்டில் தோன்றிய மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரராகக் கருதப்படுபவருமான மார்ட்டின் குரோ, தனது 53ஆவது வயதில் இன்று மரணமடைந்தார். அற்புதமான கிரிக்கெட் வீரர் என்பதைத் தாண்டி, சிறந்த எழுத்தாளர், தொலைக்காட்சி நிபுணர், வழிகாட்டி எனப் பல பரிமாணங்களில் அறியப்பட்ட மார்ட்டின் குரோ, லிம்போமா என அறியப்படும் நிணநீர் திசுக்கட்டி வகையிலான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

முதன்முறையாக 2012ஆம் ஆண்டில் அறியப்பட்ட அவரது நோய், சிகிச்சைகளுக்குப் பின்னர் குணமாகியிருப்பதாகக் கருதப்பட்டாலும், செப்டெம்பர் 2014இல், அவரது நோய்நிலைமை, அதிகரித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், இன்று அவர், தனது குடும்பத்தினர் சூழவிருக்க, மரணமடைந்தார்.

19 வயதாக இருக்கும், 1982ஆம் ஆண்டு, அவுஸ்திரேலியாவுக்கெதிராகத் தனது அறிமுகத்தை மேற்கொண்ட அவர், சிறந்த துடுப்பாட்ட நுணுக்கத்தைக் கொண்ட வீரராகப் புகழப்பட்டார். 1990ஆம் ஆண்டு, நியூசிலாந்து அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட மார்ட்டின் குரோ, 1992ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில், நியூசிலாந்து அணியை அரையிறுதிவரை கொண்டு சென்றிருந்தார். அரையிறுதிப் போட்டியில் 92 ஓட்டங்களைப் பெற்ற அவர், களத்தடுப்பில் ஈடுபடமுடியாது போயிருந்தது. அப்போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்திருந்தது. அதன் பின்னர், 1995ஆம் ஆண்டு, வெறும் 33 வயதுடையவராக இருந்தபோது, கிரிக்கெட் வாழ்விலிருந்துஅவர் ஓய்வுபெற்றார்.

ஓய்வின் பின்னரும் கிரிக்கெட்டோடு நெருங்கிக் காணப்பட்ட அவர், இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னோடியாகக் கருதப்படும் கிரிக்கெட் மக்ஸ் என்ற தொடரை அறிமுகப்படுத்தினார். 10 ஓவர்கள் கொண்ட இரண்டு இனிங்ஸ்கள், ஒவ்வோர் அணிக்கும் வழங்கப்பட்ட போட்டிகளாக அவை அமைந்திருந்தன.
2011ஆம் ஆண்டு, கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் பங்குபற்றுவதற்கு முயன்ற அவரது முயற்சி, மென்திசுக் காயங்கள் காரணமாகக் கைவிடப்பட்டது.

தொடர்ந்தும், நேர்முக வர்ணனையாளராகவும் ஆய்வாளராகவும் கடமையாற்றிய அவர், நியூசிலாந்து அணி வீரர்கள் பலருக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். இறுதியாக, கடந்தாண்டு ஏப்ரலில், டானியல் விற்றோரியின் ஓய்வுபெறும் நிகழ்வில் கலந்துகொண்ட குரோ, அதன் பின்னர் பொது வாழ்வைத் தவிர்த்திருந்தார்.

77 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய குரோ, 17 சதங்கள் உள்ளடங்கலாக 45.36 என்ற சராசரியில் 5,444 ஓட்டங்களைப் பெற்றதோடு, 143 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 4 சதங்கள் உள்ளடங்கலாக 38.55 என்ற சராசரியில் 4,704 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .