2025 ஜூலை 05, சனிக்கிழமை

வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணம்: தர்ஜினியால் சிங்கப்பூரை வென்றது இலங்கை

Editorial   / 2019 ஜூலை 16 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் லிவர்பூலின் எம் அன்ட் எஸ் பாங்க் அரங்கத்தில் இடம்பெற்றுவரும் 15ஆவது வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், தமது கோல் எய்பவரான தர்ஜினி சிவலிங்கத்தின் மூலம் ஆரம்ப இரண்டாம் கட்ட குழு ஈ போட்டியொன்றில் சிங்கப்பூரை இலங்கை வென்றுள்ளது.

16 அணிகள் கொண்ட இவ்வுலகக் கிண்ணத் தொடரில் குழு ஏயில் இடம்பெற்றிருந்த இலங்கை, தமது மூன்று முதலாவது சுற்றுப் போட்டிகளிலும் முறையே சிம்பாப்வேயிடம் 79-49, வட அயர்லாந்திடம் 67-50, அவுஸ்திரேலியாவிடம் 99-24 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருந்தது.

இந்நிலையில், இந்த உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்ற 16 அணிகளும் தலா நான்கு அணிகளாக குழு ஏ, பி, சி, டி என பிரிக்கப்பட்டிருந்த நிலையில், தத்தமது குழுக்களுக்கிடையே ஒவ்வோர் அணியும் மற்றைய அணியுடன் மோதி அதில் குழு ஏ, பியில் முதல் மூன்று இடங்களையும் பெறும் அணிகள் ஆரம்ப இரண்டாம் கட்ட குழு எஃப்க்கு சென்றதுடன், குழு சி, டியில் முதல் மூன்று இடங்களையும் பெறும் அணிகள் குழு ஜிக்கு சென்றதுடன், குழு ஏ, பி, சி, டியில் இறுதியிடங்களைப் பெற்ற அணிகள் இந்த உலகக் கிண்ணத்தில் 13ஆம் இடத்திலிருந்து 16ஆம் இடம் வரை தீர்மானிப்பதற்கான குழு ஈக்குச் சென்றிருந்தன.

அந்தவகையிலேயே குழு ஈயில் தமது முதலாவது போட்டியாக சிங்கப்பூரை நேற்று எதிர்கொண்டிருந்த இலங்கை, துலாங்கி வன்னிதிலேகா தொடர்ச்சியாக தர்ஜினிக்கு பந்துகளை வழங்க, அவர் தொடராக புள்ளிகளைப் பெற்றுக் கொண்டிருக்க முதலாவது காற்பகுதியில் 21-11 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்த இலங்கை, இரண்டாவது காற்பகுதியில் சிங்கப்பூர் 11 புள்ளிகளைச் சேர்த்த நிலையில், மேலும் 24 புள்ளிகளைச் சேர்த்து 45-22 என்ற புல்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.

பின்னர், மூன்றாவது காற்பகுதியில் சிங்கப்பூர் 14 புள்ளிகளைப் பெற்ற நிலையில், 26 புள்ளிகளைப் பெற்ற இலங்கை 71-36 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்ததுடன், இறுதிக் காற்பகுதியில் 14 புள்ளிகளை சிங்கப்பூர் பெற்ற நிலையில் 17 புள்ளிகளைப் பெற்ற இலங்கை இறுதியில் 88-50 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.

இப்போட்டியில் 78 புள்ளிகள் பெறும் முயற்சிகளில் 76 புள்ளிகளை தர்ஜினி பெற்றிருந்த நிலையில், இந்த உலகக் கிண்ணத்தில் இதுவரையில் தனிநபரொருவரால் பெறப்பட்ட அதிகூடிய புள்ளிகளாக இது பதிவாகியது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .