2025 ஜூலை 05, சனிக்கிழமை

விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: பெடரரை வென்று சம்பியனானார் ஜோக்கோவிச்

Editorial   / 2019 ஜூலை 15 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் இடம்பெற்றுவந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நடப்புச் சம்பியனான நொவக் ஜோக்கோவிச் சம்பியனாகி தனது சம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.

நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், உலகின் மூன்றாம்நிலை வீரரான ரொஜர் பெடரரை எதிர்கொண்ட உலகின் முதல்நிலைவீரரான ஜோக்கோவிச், டை பிரேக்கர் வரை சென்ற முதலாவது செட்டை 7-6 (7-5) என்ற ரீதியில் கைப்பற்றினார்.

இந்நிலையில், இரண்டாவது செட்டில் சேர்பியாவின் ஜோக்கோவிச் பின்னடைவை எதிர்நோக்கிய நிலையில், 6-1 என இலகுவாக குறித்த செட்டை சுவிற்ஸர்லாந்தின் பெடரர் கைப்பற்றினார்.

அந்தவகையில், மூன்றாவது செட்டில் பெடரர் ஆதிக்கம் செலுத்தியபோதும், டைபிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை 7-6 (7-4) என்ற ரீதியில் கைப்பற்றி ஜோக்கோவிச் மீண்டும் முன்னிலை பெற்றார்.

எவ்வாறெனினும், நான்காவது செட்டை 6-4 என பெடரர் கைப்பற்ற போட்டி தீர்க்கமான ஐந்தாவது செட்டுக்குச் சென்றது. ஐந்தாவது செட்டில் 8-7 என பெடரர் முன்னிலையில் இருக்கும்போது போட்டியை வெல்லக்கூடிய இரண்டு சந்தர்ப்பங்களை அவர் தவறவிட்ட நிலையில், 12 என்ற புள்ளிகள் மட்டத்தை அடைந்த பின்னர் இடம்பெற்ற டைபிரேக்கரில் 13-12 (7-3) என்ற ரீதியில் ஜோக்கோவிச் வென்று தனது ஐந்தாவது விம்பிள்டன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இது அவரது 16ஆவது கிரான்ட் ஸ்லாம் பட்டமென்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியானது நான்கு மணித்தியாலங்களும் 57 நிமிடங்களும் நீடித்த நிலையில், நீண்ட நேரம் இடம்பெற்ற விம்பிள்டன் இறுதிப் போட்டியாக இது அமைந்ததுடன், முதற்தடவையாக டைபிரேக்கரில் இறுதி செட்டின் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்னர், பெடரரை நான்கு மணித்தியாலங்கள் 48 நிமிடங்களில் உலகின் இரண்டாம்நிலை வீரரான ரஃபேல் நடால் 2008ஆம் ஆண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டியில் வென்றமையே விம்பிள்டனில் இடம்பெற்ற நீண்ட நேரம் கொண்ட இறுதிப் போட்டியாகக் காணப்பட்டிருந்தது.

தனது அரையிறுதிப் போட்டியில் ஸ்பெய்னின் நடாலை 7-6 (7-3), 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று பெடரரும், தனது அரையிறுதிப் போட்டியில் ஸ்பெய்னின் றொபேர்ட்டோ பட்டிஸ்டா அகட்டை 6-2, 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஜோக்கோவிச் வென்றும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .