Shanmugan Murugavel / 2016 ஜனவரி 23 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருபத்திரண்டு வருடங்கள் மற்றும் 164 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு, மேற்கிந்தியத்தீவுகளின் மிகச் சிறந்த துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான ஷிவ்நரைன் சந்திரபோல் ஓய்வுபெற்றுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில், மேற்கிந்தியத்தீவுகள் சார்பாக 11,867 ஓட்டங்களைக் குவித்து, மேற்கிந்தியத்தீவுகள் சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் வரிசையில் இரண்டாமிடத்தில் சந்திரபோல் இருக்கின்றார். சந்திரபோலை விட அதிகமாக 86 ஓட்டங்களை பெற்று 11,953 ஓட்டங்களுடன் பிரயன் லாரா, மேற்கிந்தியத்தீவுகள் சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
நாற்பத்தொரு வயதான சந்திரபோல் இறுதியாக, கடந்த வருடம் மே மாதத்துக்கு பின்னர், மேற்கிந்தியத்தீவுகள் அணியில் இடம்பெற்றிருக்கவில்லை. மேற்கிந்தியதீவுகளில் இடம்பெற்ற இங்கிலாந்துடனான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியதன் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்ட பின், அதன் பின் எட்டு மாதங்களில் இடம்பெற்ற எந்த தொடருக்கான அணியிலும் இடம்பெற்றிருக்காததோடு, கடந்த டிசம்பரில் மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் சபையால் வழங்கப்பட்ட வீரர்களுக்கான ஒப்பந்தப்பட்டியலிலும் இடம்பெறவில்லை.
மேற்கிந்தியதீவுகள் சார்பாக 268 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய சந்திரபோல், 41.60 என்ற சராசரியில் 8778 ஓட்டங்களைக் குவித்திருந்தபோதும், இறுதியாக இந்தியாவில் இடம்பெற்ற 2011 உலகக் கிண்ணத்திலேயே ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருந்தார். தவிர, 22 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் சந்திரபோல் விளையாடியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .