2026 மே 14, வியாழக்கிழமை

டெங்கு நுளம்புகளை அழிக்க 36 ஆயிரம் கப்பி இன மீன்கள்; ஏறாவூரில் இயற்கைவழி தடுப்பு செயற்திட்டம் ஆரம்

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 01 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எச்.ஏ.ஹூஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மிகமோசமாக பாதிப்பிற்குள்ளான ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இப்பொழுது டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் இயற்கை வழிமுறைச் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்எச்எம்.தாரிக் தெரிவித்தார்.

கடந்த ஆண்டின் இறுதிப்பகுதி வரை ஏறாவூரில் சுமார் 863பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒரு வயோதிப மாதுவும் ஆறு மாத வயதான சிசுவும் மரணம் அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏறாவூரில் தீவிரமாகப் பரவியிருந்த டெங்கு நோயைக் கட்டுப்படுத்த இதுவரையில் பல்வேறு ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

 தொடர்ச்சியாகப் புகை விசிறப்பட்டதோடு அபேற் எனும் இரசாயனம் பூசப்பட்ட மண்துணிக்கை முடிச்சுக்கள் ஏறாவூரிலுள்ள சுமார் ஒன்பதினாயிரத்துக்கு மேற்பட்ட கிணறுகளுக்குள் போடப்பட்டிருந்தன.

இவை ஆகக்கூடியது நான்கு மாதங்களுக்கே செயற்திறன் மிக்கவை என்பதாலும் ரசாயனம் கலந்த பாவினைகளிலிருந்து மக்கள் விலகி இயற்கையோடு இணைந்த சமநிலைக்கட்டுப்பாட்டு வழிமுறைகள்தான் நீண்ட காலத் தீர்வுக்கு வழிவகுக்கும்  என்பதால் கப்பி இன மீன்கள் கிணறுகளில் விடப்படுவதாக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்எச்எம். தாரிக் மேலும் தெரிவித்தார்.

குருநாகலில் இருந்து சுமார் 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட கப்பி இன மீன்குஞ்சுகள் ஏறாவூருக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கப்பி இன மீன்கள் இலங்கையில் மலேரியா ஒழிப்பிற்காகவும் முன்னர் பயன்படுத்தப்பட்டு வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

கப்பி இன மீன்கள் கிணறுகளில் போடப்பட்ட பின்னர் குடியிருப்பாளர்கள் கிணறுகளுக்குள் குளோரின் இடாமல் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். ஏனெனில் குளோரின் ஏற்படுத்தும் தாக்கத்தினால் இந்த டெங்கு நுளம்புகளை அழிக்கும் மீனினம் அழிந்து விடும் என்பதே காரணமாகும்.

நீரினால் ஏற்படக்கூடிய தொற்று நோய்களை தவிர்த்துக்கொள்வதற்காக கிணறுகளிலிருந்து பெறும் நீரை கொதித்து ஆறவைத்துப் பயன்படுத்துமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றார்கள்.  கப்பி இன மீன்களை கிணறுகளுக்குள் போடும் இயற்கை வழி டெங்குத் தடுப்புச் செயற்திட்டம் வெற்றியளிப்பதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பை சுகாதாரப் பகுதியினர் நாடி நிற்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .