2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'மது பாவனையாளர்கள் 125 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டள்ளது'

Kogilavani   / 2014 ஜூன் 03 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்


'மட்டக்களப்பு விமோச்சனா இல்லத்தினூடாக கடந்த இரண்டரை வருடங்களில் 125 மது பாவனையாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மதுபாவனையைத் தவிர்க்கும் நிலையமான மனித நேய ஒன்றிய விமோச்சனா இல்லத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி செல்விக்கா சகாதேவன் தெரிவித்தார்.

மேற்படி இல்லத்தில் திங்கட்கிழமை(2)  மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

விமோச்சனா இல்லமானது, கடந்த 1.12.2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த இல்லம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த இரண்டரை ஆண்டுகளில் 125 மது பாவனையாளர்கள் சிகிச்சையளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். 

சமய வேறுபாடின்றி இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்த நிலையத்தில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுக்கு  மருந்துகள் வழங்கி எந்த சிகிச்சையும் வழங்கப்படுவதில்லை.

உள ஆற்றுப்படுத்தல், மது போதையை தவிர்த்தல், மனித மகத்துவத்தையும், சுய உணர்வை நிலை நாட்டுதல், யோகாசனம், சமய போதனை, தனி நபர் ஆற்றுப்படுத்தல் போன்ற நடவடிக்கை இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதுபோதையை தடுத்தல் இங்கு முதலாவது விடயமாக காணப்பட்டாலும், மதுபானம் அருந்துதல் விஞ்ஞான ரீதியில் இது ஒரு நோய் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

வேறு ஏதாயினும் ஒரு நோயைப் போன்று இதனையும் குணப்படுத்தலாம்.
 
மதுபோதையற்ற வாழ்வில் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழவும் நன்கு விரும்பும் குடும்ப அங்கத்தினராக வரவும் முடியும். மதுபாவனையாளர்கள் அதிலிருந்து விடுபட்டு தமது குடும்பத்திலிருந்த மீள்மதிப்பை பெறுவதுடன் குடும்ப பெயர் ஏற்றமும் ஏற்படும்.

ஆரோக்கிய உடலை பெறுவதோடு பல சவால்களை எதிர்நோக்கும் தெளிவான மனதுடன் இருக்க முடியும் என்பதை இந்த நிலையம் மதுபாவனையாளர்களுக்கு வலியுறுத்துகின்றது.

இந்த நிலையத்திற்கு வரும் ஒரு மது பாவனையாளர் 36 நாட்கள் இங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டும்.
அவர் இங்கு தங்கியிருக்கும் காலத்தில் அவருக்கான தங்குமிட வசதி உணவு வசதிகள் என்பன இலவசமாக வழங்கப்படுகின்றன.

இந்த நிலையம் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டதாகும். கனடாவைச் சேர்ந்த மதுபாவனைக்கு அடிமையாகி அதிலிருந்து விடுபட்ட ஜோடன் கோர்த் என்பவர் இதற்கு உதவிகளை வழங்கி வருகின்றார்.

இந்த நிலையத்தில் 23 வயது தொடக்கம் 69 வயது வரையான மது பாவனைக்கு அடிமையானவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள பல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர். அதில் முஸ்லிம்களும் அடங்கு கின்றனர்.

இந்த நிலையத்தல் சிகிச்சை பெற்றவர்களில் 90 வீதமானவர்கள் அடிக்கடி இந்த நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
எதிர்காலத்தில் இந்த நிலையத்தில் பெண் மதுபாவனையாளர்களையும் சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்' என தெரிவித்தார்.

இதன்போது மதுபாவனையாளர்களுக்கு மாலை நேரத்தில் வழங்கப்படும் உள ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தினையும் இவர் காண்பித்தார்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள கல்லடி இலக்கம் 185 எனுமிடத்தில் இந்த நிலையம் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X