2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் கடந்த 05 வருடங்களில் 695 தொழுநோயாளர்கள் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 26 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.சசிகுமார்


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 05 வருடங்களில் 695 தொழுநோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக  மட்டக்களப்பு மாவட்ட தொழுநோய் தடுப்புச் சிகிச்சைப் பிரிவின் பொதுச் சுகாதார பரிசோதகர் பி.மனோகரன் தெரிவித்தார்.

இந்த நோயால் 38 பேர் அங்கவீனமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச தொழுநோயாளர் தினம் ஜனவரி மாதம் 26ஆம் திகதியாகும்

இதனை முன்னிட்டு தொழுநோய் தடுப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26)  நடைபெற்ற ஊடகவியலாளர்கள்  சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டில் 119 பேருக்கும் 2010ஆம் ஆண்டில் 126 பேருக்கும் 2011ஆம் ஆண்டில் 151 பேருக்கும் 2012ஆம் ஆண்டில் 152 பேருக்கும் 2013ஆம் ஆண்டில் 147 பேருக்கும் தொழுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

2013ஆம் ஆண்டில் மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பிரிவில் 33 தொழுநோயாளர்களும் ஆரையம்பதி பிரதேச சுகாதார சேவைகள் பிரிவில் 18 பேரும் ஏறாவூர் சுகாதார அலுவலகப் பிரிவில் 27 பேரும் செங்கலடி பிரதேசத்தில் 22 பேரும் காத்தான்குடி பிரதேசத்தில் 8 பேரும் பட்டிப்பளை பிரதேசத்தில் 7 பேரும் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 10 பேரும் வழைச்சேனை பிரதேசத்தில் 12 பேரும் ஓட்டமாவடி பிரதேசத்தில் 4 பேரும்
வவுணதீவு பிரதேசத்தில் 3 பேரும் கிரான் பிரசேத்தில் 3 பேரும் அடையாளம் காணப்பட்டனர்

இந்த நோய் சன நெருக்கடியுள்ள பிரதேசங்களில் அதிகளவு பரவியுள்ளது' என்றார்.

இதில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,  டாக்டர் எஸ்.சதுர்முகம் தெரிவிக்கையில், 

மட்டக்களப்பு மாவட்டத்தில்  தொழுநோய் வேகமாக பரவுகின்ற நிலையில் இதனைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்,  மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், தொழுநோய் தடுப்பு இயக்கம் என்பன இந்த நோய் தொடர்பான விழிப்பூட்டலை மேற்கொண்டுள்ளது.

இந்த நோய்க்குரிய அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டுபிடித்துச் சிகிச்சை அளிப்பதன் மூலம் முழுமையாகக் குணப்படுத்தமுடியும் எனவும் கூறினார்.

இதேவேளை மட்டக்களப்பு  மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், டாக்டர் ஏ.எல்.றஹ்மான் தெரிவிக்கையில்,

'இந்த நோய் தொற்றாத வகை, தொற்றும் வகை என இரண்டு வகையிலுள்ளன. இந்த நோய் மைக்றோ பற்றிரீயா எனப்படும் கிருமி மூலம் சுவாசத்தின் ஊடாக பரவுகின்றது. தேமல் போன்ற அடையாளம் காணப்படுவதுடன், நரம்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

இந்தக் கிருமி தொற்றி உடனடியாக இந்த நோய்க்கான அறிகுறி தென்படாது. 06 மாதங்களிலிருந்து   20 வருடங்களுக்குப் பின்னர் இந்த நோய்த் தாக்கத்தைக் காணமுடியும் எனவும் கூறினார்.

இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மட்டக்களப்பு பிராந்திய தொற்றுநோய் வைத்திய நிபுணர் டாக்டர் திருமதி எஸ்.கௌரிபாலன், மட்டக்களப்பு மேற்பார்வை சுகாதார பரிசோதகர் பி.தேவராஜ் உட்பட சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .