2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் 220,525 பேர் வெள்ளத்தால் பாதிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 11 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழையைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 62,240 குடும்பங்களைச் சேர்ந்த 220,525 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டகளப்பு மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை மாலைவரை வெள்ளத்தால் இடம்பெயர்ந்த 135 குடும்பங்களைச் சேர்ந்த 535 பேர் 5 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8,451 குடும்பங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிரம்படித்தீவு பலநோக்கு மண்டபம், பூவாக்காடு பாடசாலை மண்டபம், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வந்தாறுமூலை மகா வித்தியாலயம், கண்ணகி மகா வித்தியாலயம், பலாச்சோலை வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலேயே இம்மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கூறியுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு கல்விக் கோட்டத்திலுள்ள சாஹிரா பாடசாலை வெள்ளம் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை மூடப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எ.டேவிட் தெரிவித்தார்.

சாஹிரா பாடசாலைக்குள் வெள்ளநீர் தேங்கியுள்ளதால்  வகுப்பறைகளிலிருந்து மாணவர்கள் கல்வி கற்கமுடியாத நிலைமை காணப்படுகின்றது. இதனால் இப்பாடசாலை இன்றையதினம் மூடப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை இப்பாடசாலை மீண்டும் திறக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை கல்வி கோட்டத்திலுள்ள 26 பாடசாலைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும் இவற்றில் சில பாடசாலைகளுக்குள் வெள்ளநீர் தேங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X