Suganthini Ratnam / 2016 நவம்பர் 25 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
ஆரம்பித்துள்ள மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய ஆயத்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான விசேட ஆராய்வுக் கூட்டம் இன்றையதினம் வெள்ளிக்கிழமை (25) மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்றது. இங்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மாவட்டத்தில் அனர்த்தம் ஒன்று ஏற்படும்போது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு அதிகாரிகளிடம் ஆலோசனைகளும் கேட்கப்பட்டன.
தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதனால் எதிர்பார்க்கப்படும் வெள்ளம் மற்றும் கடும் காற்று போன்ற அனர்த்தங்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து இதன்போது கருத்துப் பரிமாறப்பட்டது.
அவசரகால நிலைமையின்போது தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயாராக இருப்பதாகவும் அதற்கு அனைத்து திணைக்களங்களும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டது.
இதன் போது கருத்துத் தெரிவித்த பிரதேச சபைகளின் செயலாளர்கள் தமது பிரதேசங்களின் வடிகாலமைப்புக்கள் சீர் செய்யப்பட்டுள்ளதாகவும், அனர்த்தங்கள் ஏற்படும் வேளையில் அவற்றினை எதிர் கொள்வதற்கான ஆயத்த நிலையில் உள்ளதாகவும், தேவைப்படும் உதவிகளை மாவட்ட செயலகத்துடன் ஒருங்கிணைப்பினை மேற்கொண்டு மக்களுக்கு வழங்கத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இங்கு கருத்து வெளியிட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், கடந்த மாதங்களில் ஏற்பட்ட கடும் வரட்சியான வேளைகளில் ஒத்துழைப்புடன் செயற்பட்ட பிரதேச செயலகங்கள், சபைகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்வரும் மழைக்காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களின் போது மிகவும் சிறப்பாகச் செயற்பட வேண்டும்.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் வேளையில் இவ்வருடம் அதிகமான மழை பெய்யக்கூடிய வாய்ப்பிருப்பதாக எதிர்வு கூறல்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் அனைத்து திணைக்களங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆயத்த நிலையில் இருத்தல் அவசியமாகும்.
குடிநீர் விநியோகம், இருப்பிட வசதிகள், போக்குவரத்து வசதிகள், உணவு வழங்கல், மருத்துவ, சகாதார வசதிகள் என அனைத்து விடயங்களிலும் கவனத்துடன் செயற்பட வேண்டும். திட்டமிட்ட செயற்பாடுகளின் மூலமே அனர்த்தங்களைக் குறைப்பதுடன் ஆபத்துக்களையும் தடுக்க முடியும் என்றார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் உதவிப்பணிப்பாளர், கடந்த இரண்டு மாதங்களாக அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான கலந்துரையாடல்கள் பிரதேச செயலக ரீதியாக நடத்தப்பட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் கடந்த வாரத்தில் பெய்த கடும் மழை காரணமாக நகரின் பல பகுதிகள், கிராமங்களிலும் வெள்ளம் ஏற்படக் கூடிய நிலை உருவாகியிருந்தது. ஆனாலும் காலநிலை சற்றுச் சீரடைந்ததுடன், மட்டக்களப்பு முகத்துவார ஆற்றுவாய் செவ்வாய்க்கிழமை மாலை அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அதிகாரிகளின் பிரசன்னத்துடன் வெட்டப்பட்டதையடுத்து வெள்ள நிலை தடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் வடகிழக்குப் பருவகால மழை தற்போதும் ஆரம்பிக்காத நிலையில் இவ்வருடம் அதிக மழை பெய்யக்கூடிய வாய்ப்பிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.

9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025