2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'அபாயா அணிய முடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது'

Niroshini   / 2016 நவம்பர் 22 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

“பாடசாலைகளிலோ அல்லது வேறு அரச நிறுவனங்களிலோ முஸ்லிம் பெண்கள் அபாயா அணிய முடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது” என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று (22) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“முஸ்லிம் பெண்கள் அபாயா  அணிவதென்பது முஸ்லிம்களுக்கான தனித்துவமான உடையாகும்.பாடசாலைகளிலோ அல்லது வேறு அரச நிறுவனங்களிலோ அபாயா அணிய முடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது

புதிதாக நியமனம் பெற்று தமிழ் பாடசாலைகளுக்கு செல்லும் முஸ்லிம் ஆசிரியைகள் கட்டாயம் சேலை அணிந்து வர வேண்டும் என்று அதிகாரிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டதாக கடந்த ஒரு சில வாரங்களாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளன

இத்தகைய பிழையான நிர்ப்பந்தங்களை நிருவாகிகள் ஏற்படுத்துவதென்பது கண்டிக்கத்தக்கதாகும்.

இந்நாட்டில் உள்ள தேசிய இனங்களான சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என மூவினத்தவர்களுக்கும் அவர்களுக்குரிய கலாசார உடைகளை அணிவதற்குரிய பூரண உரிமையுள்ளது. மேலும், இலங்கையில் ஆசிரியைகள் சேலை அணிந்துதான் கடமைக்கு வர வேண்டும் என்ற எந்தவொரு சட்டமும் கிடையாது.

தற்போது நாட்டில் இனவாதம் தலை தூக்கியிருக்கின்ற ஒரு நிலையில் தமிழ் பேசும் மக்களுக்கிடையில் இத்தகைய பிரச்சினைகளை உருவாக்க நினைப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

முஸ்லிம்கள் தமிழ் பேசும் மக்களாக இருந்தாலும் இந்நாட்டின் தனித்துவமான ஒரு தேசிய இனமாகும். அவர்களுக்கென பிரத்தியேகமான கலாசாரமும் மத உரிமைகளும் உள்ளபோது இவ்வாறு கட்டாயப்படுத்துவதென்பதனை ஒரு மனித உரிமை மீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

எனவே, தமிழ் பாடசாலைகளில் கடமை புரிகின்ற முஸ்லிம் ஆசிரியர்கள் யாராவது இவ்வாறு நிர்ப்பந்திக்கப்பட்டால், அது விடயம் தொடர்பாக எங்களுக்கு உடனடியாக அறியத்தருவதன் மூலம் அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். மேலும், இவ்வாறான நிபந்தனைகளுக்கும் வற்புறுத்தல்களுக்கும் அடிபணிந்து சேலை அணிய வேண்டும் என்ற எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது” எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X