2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'அரசியல்வாதிகள் புறக்கணிக்கப்பட்டதால் ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியை தனிமைப்படுத்தியுள்ளனர்'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியின் 105ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் அரசியல்வாதிகள் புறக்கணிக்கப்பட்டதன் மூலம் அந்தக் கல்லூரியை ஏற்பாட்டாளர்கள் தனிமைப்படுத்தி விட்டார்கள் என்பதுடன், இது துரதிருஷ்ட வசமானது எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தினதும் ஏறாவூரினதும் அரசியல்வாதிகள் அனைவரும் ஏதோவொரு வகையில் அலிகார் தேசிய கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவி வந்துள்ளார்கள் எனவும் அவர் கூறினார்.  

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியின் 105ஆவது ஆண்டு நிறைவையொட்டி, பழைய மாணவர்களின் நடைபவனியும்; ஒன்றுகூடல் வைபவமும் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை நடைபெற்றது.

அலிகார் தேசிய கல்லூரியின் பழைய மாணவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், கடற்றொழில் நீரியல்வளங்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஏ.அப்துல் மஜீத்,  முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் உட்பட இன்னும் பல ஓய்வு பெற்ற மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர்; கலந்துகொண்டனர்.

இங்கு அழைக்கப்பட்ட அரசியல்வாதிகள் அனைவரும் அலிகாரின் பழைய மாணவர்கள் என்ற கோதாவில் அழைக்கப்பட்டதாகத் தெரிவித்த ஏற்பாட்டாளர்கள், அவர்களில் எவருக்கும் மேடையில் உரையாற்றுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கவில்லை.

இதனால், அங்கு வருகை தந்திருந்த அரசியல்வாதிகள் நிகழ்ச்சியின் இடைநடுவில் எழுந்து சென்று விட்டதாகத் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .