2025 மே 26, திங்கட்கிழமை

'அழுத்தங்களை மக்கள் பிரதிநிதிகளே வழங்க வேண்டும்'

Niroshini   / 2017 மே 06 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

“வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டாலும், திறைசேரி வெற்றிடங்களை முழுமையாக நிரப்புவதற்கான அழுத்தங்களை மக்கள் பிரதிநிதிகளே வழங்க வேண்டும்” என, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரக போராட்டம் 75ஆவது நாளாகவும் இன்று சனிக்கிழமையும் நடைபெற்று வருகின்றது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றுவரும் இந்த போராட்டம் இரவு பகலாக இடம்பெற்றுவருகின்றது.

“பட்டதாரிகளின் பிரச்சினைக்கு 95சதவீத தீர்வு கிடைத்துள்ளதாக கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் 1/2016 ஆசிரிய ஆளணி சுற்றுநிருபத்தின் அனுமதி மட்டுமே தற்போது கிழக்கு மாகாணத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை பட்டதாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிருஷாந் தெரிவித்தார்.

மேலும், “இவற்றுக்கான அனுமதியை ஏனைய 08 மாகாணங்களும் ஏற்கெனவே பெற்று, படிப்படியாக வெற்றிடங்களைப் பூர்த்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனையே கிழக்கு மாகாணம் தற்போது தாமதமாகப் பெற்றுள்ளமையை பட்டதாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அனுமதி, பட்டதாரிகளின் அழுத்தத்தின் காரணமாகவே பெறப்பட்டுள்ளது என்பது எமது போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. ஆயினும், இந்த வெற்றிடங்களை நிரப்ப கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண பிரதம செயலாளர் ஊடாக மத்திய திறைசேரியின் அனுமதியைப் பெற வேண்டும்.

இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதும், ஆட்சேர்ப்பு தொடர்பான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அனுமதி கோரல் கிழக்கு மாகாணசபையால் இன்னும் அனுப்பப்படவில்லை என்பதை அனைத்துப் பட்டதாரிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திறைசேரி வெற்றிடங்களை முழுமையாக நிரப்புவதற்கான அழுத்தங்களை மக்கள் பிரதிநிதிகளே வழங்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X