2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'ஆடைத்தொழிற்சாலையை அமைத்துத் தராவிட்டால் நான் எதிர்க்கட்சியில் அமர்வேன்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

'கிழக்கு மாகாண முதலமைச்சர் வாக்குறுதியளித்தபடி பட்டிருப்புத்தொகுதியில் படுவான்கரைப் பிரதேசத்தில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றினை இந்த வருட இறுதிக்குள் அமைத்து தராவிட்டால் நான் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்வேன்'; என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்னபிள்ளை தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றங்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் கொத்தணி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபையின் ஏற்பாட்டில் எருவில் கண்ணகியம்மன் ஆலய முன்றலில்  திங்கட்கிழமை  (15) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'கிழக்கு மாகாண சபையில் தாங்கள் ஆளும் தரப்பில் அமர்ந்து இருப்பதனால் எமது மக்கள் அபிவிருத்தி தொழில் வாய்ப்பு என்பனவற்றினை எதிபார்க்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்பினை  நாங்கள் தட்டிக்கழிக்க முடியாது.  கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி எமது மக்களின் எதிர்பார்ப்பில் சிலவற்றையாவது மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.
அந்த வகையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட படுவான்கரைப் பிரதேசத்திற்கு ஒரு ஆடைத் தொழிற்சாலையை அமைத்துத்தந்து பிரதேச மக்களின் தொழில் வாய்ப்பிற்கு உதவி செய்யுங்கள் என முதலமைச்சரிடம் சென்ற வருடம் கோரிக்கை விடுத்திருந்தேன். இதற்கு அவர் உறுதியளித்திருந்தார்.  அமைப்பதற்கான இடத்தினையும்  சென்ற வருடம் வெல்லாவெளி பிரதேச சபை கட்டித்திறப்பு விழாவுக்கு வருகைதந்த போது அழைத்துச் சென்று காண்பித்திருந்தேன். இதன் போது விழாவுக்கு வருகைதந்திருந்த சக மாகாண சபை உறுப்பினர்கள் இதற்கு விமர்சனமும் வெளியிட்டனர். இதன் பின்னர் முதலமைச்சரிடம் பல தடவைகள் இது சம்பந்தமாக பேசியும் எந்த வித பதிலும் எனக்கு வழங்கப்படவில்லை

சென்ற வாரம் முதலமைச்சரை அவரது காரியாலயத்தில் சந்தித்தேன். நீங்கள் சென்ற வருடம் ஆடைத் தொழிற்சாலைக்கு கல் வைப்பதற்காக  உறுதியளித்தீர்கள் இருந்தும் இதனை எமது மாகாண சபை உறுப்பினர்கள் தடுத்துள்ளனர். மீண்டும் நான் உங்களிடம் கேட்கின்றேன் படுவான்கரை மக்களின் நன்மைகருதி இதனை எமக்கு அமைத்துத்தார வேண்டும் இதற்கான உறுதிமொழியினை இன்றே நீங்கள் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன் இதற்கு அமைய இதற்கான திகதியை வழங்கும்படி தனது செயலாளரை  பணித்துள்ளார். இது நடைபெறும்  என நான் எதிர்பார்கின்றேன் இந்த சந்தர்ப்பத்தையும் முதலமைச்சர் தவற விட்டால் நான் மாகாண சபையில் எதிர்க்கட்சியில் அமர வேண்டிய நிலை ஏற்படும்

நாங்கள்  மக்களின் விருப்பினை நிறைவேற்றக் கூடிய வகையில் செயற்பட வேண்டும். மற்றைய இனங்கள் தற்காலத்தில் வாழ்ந்து கொண்டு போவதற்கும் எமது இனம் தாழ்ந்து கொண்டு போவதற்கும் இடமளிக்க முடியாது நான் மற்றவையர்கள் போன்று இல்லை எந்தக் கட்சியில் இருந்தாலும் எமது தமிழ் மக்களுக்கு உரிய சேவையினை நிறைவேற்றுவதே எனது நோக்கமாகும்' எனத்  அவர் தெரிவித்தார் .

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X