Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
அபிவிருத்தியால் மாத்திரம் இன முரண்பாட்டை தீர்க்கமுடியாதென மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடிப் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம், அப்பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இவ்வருடம்; காத்தான்குடிப் பிரதேச செயலப்பிரிவில் 51 திட்டங்களுக்காக 72 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 31 திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளதாக அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'யுத்தத்தின் பின்னரான இக்காலகட்டத்தில் இன முரண்பாடுகள் களையப்பட்டு, சமாந்திரமாக அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இந்த நாடு அபிவிருத்தியை நோக்கி நகர்கின்ற அதேவேளை, இனங்களுக்கிடையில் இருக்கின்ற இன முரண்பாடுகள் களையப்பட வேண்டுமென்பதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட இந்த நல்லாட்சி அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற இன முரண்;பாடுகள் நீக்கப்பட்டு, ஒவ்வொரு இனமும் தங்களின் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, இந்த நாட்டிலுள்ள சகல பிரஜைகளும் இலங்கையர் என்ற உணர்வுடன் வாழ்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்' என்றார்.
'அபிவிருத்தியால் மாத்திரம் புரையோடிப் போயிருக்கின்ற இன முரண்;பாட்டைத் தீர்க்க முடியாது. அபிவிருத்திக்கும் அதேபோன்று, இன ரீதியான முரண்பாடுகளை நீக்குவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென்ற ஜனாதிபதியின் புதிய சிந்தனையின் வழிகாட்டலில் இன முரண்பாடு நீக்கப்பட்டு அபிவிருத்திகளை மேற்கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த அடிப்படையில் நாட்டிலுள்ள சகல பிரதேச அபிவிருத்திக்குழுக்கள், மாவட்ட அபிவிருத்திக்குழுக்கள் தீர்மானங்களை எடுக்க வேண்டும். அவற்றின் செயற்பாடுகள் இருக்க வேண்டுமென்று மிகத் தெளிவாக அறிவுறுத்தியிருக்கின்றனர்' என்றார்.
'மேலும், காத்தான்குடிப் பிரதேசத்தில் மிக விரைவில் 'சுவரஸ்' எனப்படும் மலக்கழிவு முகாமைத்துவத்திட்டம் சுமார் 130 மில்லியன் டொலர் நிதியுதவியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது பாரிய திட்டமாகும். இதற்கான சகல உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டு, வேலைகளை ஆரம்பிப்பதற்கான அறிவுறுத்தலும் சீன நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சீன நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள 03 பாரிய திட்டங்களில் காத்தான்குடியில் மேற்கொள்ளப்படவுள்ள மலக்கழிவு முகாமைத்துவத்திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு அங்கிகாரம் வழங்கி, அதற்கான சகல நடவடிக்கைகளும்; மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான நிதியைக் கூட விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை திறைசேரி செய்துள்ளது. இத்திட்டத்தை மேற்கொள்ள சகல அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும்' எனவும் அவர் கூறினார்.


2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago