2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லையாயின், நாடு பாரிய சவாலை எதிர்நோக்கும்'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்

'இனப்பிரச்சினை இதய சுத்தியுடன் தீர்க்கப்படவில்லையாயின், இந்த நாடு பாரிய சவாலை எதிர்நோக்கும் என்ற யதார்த்தத்தை நாம்; உரத்துக்கூறாமல் இருக்கமுடியாது' என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.  

கரடியனாறுப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (24) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு சிறந்த தீர்வு இந்த நல்லாட்சிக் காலத்தில் கிடைக்கவில்லையாயின், இன்னும் அரை நூற்றாண்டு சென்றாலும் அரசியல் அதிகாரப்பங்கீடு கிடைக்காத துரதிருஷ்டம் தொடரும். அத்துடன், சிறுபான்மையினச் சமூகங்களை ஆட்சியாளர்கள் இருக்க வைத்தால், பாரிய சவாலை இந்த நாடு எதிர்நோக்கும்' என்றார்.

'அடிக்கடி நான் சுட்டிக்காட்டும் விடயமானது கிழக்கு மாகாணத்தில் புரட்சி ஏற்படலாம். அது ஆயுதப் புரட்சி அல்ல, வறுமைப் புரட்சியாகக் கூட இருக்கலாம். தொழில் இல்லாத இளைஞர், யுவதிகள் வறுமை காரணமாக போராட்டத்தை ஆரம்பிக்கலாம். ஆகவே, கசப்பான வரலாற்றைத் தொடரவிடாமல், அதிகாரப்பகிர்வின் மூலம் அபிவிருத்திகளை மேற்கொண்டு, நாட்டில் சமத்துவத்தைப் பேண அரசாங்கம் முயற்சிக்க வேண்டும்.

கடந்த 03 தசாப்தகாலமாக இனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிப்பு என்ற வரலாறு, எங்களுக்கு  கசப்பான உண்மையை நினைவுகூரும் விடயம் ஆகும். இது இனியும் தொடரக்கூடாது. இதற்காக இந்த நாட்டின் அத்தனை அரசியல் தலைமைகளும் ஒன்றுபட்டு, அரசியல் தீர்வை உடனடியாக அமுல்படுத்தவேண்டிய தேவை உள்ளது. இனவாத நஞ்சை அகற்றுவதற்காக அரசியல் தலைமைகள் பல தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இன ஒற்றுமை எனும் விடயத்தை தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் இணைந்து இந்த நாட்டுக்கு முன்னுதாரணமாகச் சாதித்துக் காட்டியுள்ளோம்' எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X