2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'இலங்கை ஆசிரியர் சேவை பிரமானக் குறிப்பேட்டில் திருத்தப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
கிழக்கு மாகாணப் பட்டதாரி ஆசிரியர்களின் ஆட்சேர்ப்பு வயதெல்லை அதிகரிப்புத் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை பிரமானக் குறிப்பேட்டில் திருத்தம் செய்யப்பட்டு, அத்திருத்தம் தொடர்பாக அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்தது.
 
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பொ.உதயரூபன் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இலங்கை ஆசிரியர் பிரமானக் குறிப்பானது 2014.10.23 அன்று 1885ஃ38 இலக்கமிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியினால் வெளியிடப்பட்டிருப்பதோடு 2008.07.01 முதல் செயற்படும் வண்ணம் காணப்படுகிறது. இவ்விசேட வர்த்தமானியானது 19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கிணங்க பொதுச் சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டது.
 
இவ்விசேட வர்த்தமானியினால் ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பாக 7இல் குறிப்பிடப்பட்டமைக்கிணங்க 7.2.2.3 இல் வயதெல்லை 18 தொடக்கம் 35வரை வரையறுக்கப்பட்டுள்ளது.
 
இவ்வயதெல்லையை அதிகரிப்பதாயின் சேவைப்பிரமான குறிப்பில் திருத்தம் செய்யப்பட்டு நாடு பூராகவும் செயற்படும்வண்ணம் தேசிய கொள்கையாக பொதுச்சேவை ஆணைக்குழுவால் கட்டளையிடப்படவேண்டும்.
 
13ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கமைவாக மாகாண கல்வி அமைச்சு பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்புச் செய்வதற்கான அதிகாரத்தைக்கொண்டு காணப்படினும் தேசிய கொள்கையை மாற்றியமைப்பதற்கான அதிகாரத்தை கொண்டு காணப்படவில்லை.
 
கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் இப்பட்டதாரிகளை அரசியலுக்கு பயன்படுத்துவதை தவிர்த்து ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதற்கு முன் சேவைப்பிரமானக் குறிப்பில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். கடந்த காலங்களில் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட சனநாயக ரீதியான கவனயீர்ப்பு போராட்டங்கள் மூலம் இலங்கை கல்வி நிர்வாகச்சேவை பிரமானக் குறிப்பில் திருத்தம் செய்யப்பட்டு வயதெல்லை அதிகரிக்கப்பட்டு விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
 
நலிவுற்ற வடக்கு, கிழக்கு கல்வியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதைக் கவனத்தில் கொள்ளாது அரசியல்வாதிகள் ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X