2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'இலங்கை மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

இலங்கை மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதுடன், நாட்டின் கொடியானது எந்தவொரு மதத்தையோ இனத்துவ சமயக் குழுக்களையோ பிரதிபலிக்காத, ஆக்கிரமிப்பு தன்மையுள்ளதாக இருக்கக் கூடாது என மட்டக்களப்பு சூரிய பெண்கள் அபிவிருத்தி அமைப்பு  தனது ஆலோசனையை முன்வைத்துள்ளது.  

மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை  இடம்பெற்ற அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்களை கேட்டறியும் குழுவிடமே, இந்த அமைப்பு அதன் ஆலோசனையை முன்வைத்துள்ளது.

இந்த அமைப்பின் ஆலோசகர் பேராசிரியர் திருமதி சித்திரலேகா மௌனகுரு, ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'பெண்களின் உரிமைகளை பாதிக்கின்ற தற்போதுள்ள சட்டங்கள் இல்லாதொழிக்கப்படல் வேண்டும். அத்தோடு சொத்து, காணி, திருமணம், சுகாதாரம், பரம்பரை சொத்து தொடர்பாக அனைத்துப் பிரஜைகளும் பாரபட்சமற்ற பொதுச்சட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட வேண்டும்.

வடமாகாணத்தில் உள்ள தமிழ்ப் பெண்கள், கணவர்மார்களின் அனுமதியின்றி தங்களது சொத்தை கையாள முடியாது மற்றும் முஸ்லிம் சட்டத்தின் கீழ் பெண்களின் திருமண வயது 12 ஆக உள்ளமை, பெண்களின் சம்மதமின்றி விவாகரத்து ஒரு தலைப்பட்டசமாக இடம்பெறுகின்றமை இதற்கு உதாரணமாக குறிப்பிடமுடியும்.

இலங்கைப் பிரஜையுடன் திருமண பந்தத்தில் இணையம் எந்தவொரு நபருக்கும் அவர் விரும்பும் பட்சத்தில், இலங்கை பிரஜாவுரிமை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கான உரிமை இந்த அரசியல் யாப்பில் இருக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு குறிப்பிட்ட சரியான நேரத்தில் நீதியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் விசேடமான நீதிமன்றம் பெண்களாகிய எமக்கு வேண்டும்.

வரலாற்று ரீதியாக பெண்களுக்கு எதிரான பாரபட்சம்; சமத்துவமின்மை போன்ற இயல்புகளை அங்கிகரிக்காத வகையில் பெண்களின் உரிமைகள், அடிப்படை உரிமைகள் பிரிவின் கீழ் தனிப்பகுதியாக இடம் பெறவேண்டும்.

இலங்கையிலுள்ள ஒவ்வொரு நபரும் கௌரவமாக வாழக் கூடிய உரிமை இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பிரஜையும் வன்முறைகளற்ற வாழ்வு வாழ்வதற்கான உரிமையை இந்த அரசியலமைப்பு உத்தரவாதமளிக்க வேண்டும். சிறுவர்கள் விசேடமாக பாதுகாக்கப்படல் வேண்டும்.

மரண தண்டனை இல்லாதொழிக்கப்படல் வேண்டும்.  பாலியல் சார்பு நிலை, விவாக நிலை, கனவனை இழந்தோர் கர்ப்பம் என்ற அடிப்படைகளைக் கொண்ட பாரபட்சங்கள் காட்டப்படதிருப்பதை புதிய அரசியல் யாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்பன போன்ற விடயங்கள் மேலும் இதன்போது முன்வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X