2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

“ஒருவரையொருவர் கௌரவித்தால் அனைவரும் ஒன்றாக வாழ முடியும்'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

'நாங்கள் ஒருவரை ஒருவர் கௌரவித்தால், இந்த நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியும்.  அவ்வாறில்லாமல், நாங்கள் கூடுதலானவர்கள், எமது விருப்பத்தின் படியே எல்லாம் நடக்க வேண்டும் என்றும் மற்றவர்கள் எங்களின் விருப்பத்துக்கு இணங்கவே   இருக்க வேண்டும் என்றும் நினைத்தால், சுமூகமான நிலைமை ஏற்படாது' எனக் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர்; கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

'நாங்கள் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளாக ஒன்றாக, ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தேசியகீதம் சொல்கின்றது. ஆனால், அது இதுவரையில் பின்பற்றப்படவில்லை. தற்போதே அதற்கான ஆரம்ப சூழல் உருவாகியுள்ளது' எனவும் அவர் கூறினார்.

26 மீன்பிடிச் சங்கங்களுக்கு தோணிகளும்  45 மீன்பிடிச் சங்கங்களுக்கு வலைகளும் வழங்கும் நிகழ்வு திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை (2) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'இந்த நல்லாட்சியில் இலங்கையிலுள்ள அநேகமான தமிழ், சிங்கள, முஸ்லிம் கட்சிகள் இணைந்த ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

முன்பெல்லாம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேசியக்கொடி ஏற்றுவது, தேசியகீதம் பாடுவது  கிடையாது. நிகழ்வொன்று நடைபெறுமாயின், அது பெரிய நிகழ்வாக, பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் நிகழ்வாக இருக்கும். ஆனால், தற்போது அவ்வாறில்லை. ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசியகீதம் பாடப்படுகின்றது. அதன்போது தலைவணங்கி நிற்கின்றோம். அது ஏனெனில், இப்போது இலங்கையிலுள்ள எல்லா மக்களையும் அவர்களின் உரிமைகளையும் மதிக்கின்ற அரசாங்கம் ஆட்சி செய்கின்றமையே இதற்கான காரணமாகும்' என்றார்.  

'மேலும், தமிழர்களை ஒருபோதும் பிரிவினைவாதிகள் என்று நினைத்துவிடக் கூடாது. நாங்கள் அனைவரும் ஒரே இடத்திலிருந்து வந்தவர்கள் என்பதுடன், இறந்த பின்னரும்  ஒரே இடத்துக்கே செல்லப் போகின்றோம். எனவே இங்கு இருக்கும்போது, நாங்கள் எங்கள் மொழியைப் பேச வேண்டும், நீங்கள் உங்கள் மொழியைப் பேச வேண்டும். நீங்கள் உங்கள் கடவுளை வணங்க வேண்டும். நாங்கள் எங்கள் கடவுளை வணங்க வேண்டும். ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்யாமல் சகோதரர்களாக இருக்க வேண்டும்.

நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால், ஒருவரை ஒருவர் மதித்து வாழ வேண்டும்.
சிங்கள மொழியை நாம் விரும்பாமல் இருந்தமைக்கு எம் மீதான திணிப்பே காரணம். ஆதைப் படிக்க வேண்டும் என்று எமக்குத் திணிக்கப்பட்டது. ஆங்கிலத்தைப்; பேச முடிந்த எம்மால்,  சிங்களத்தைக் கற்க முடியாதளவில் நிலைமை இருந்தது. நாங்கள் உதாசீனம் செய்யப்பட்டோம். அதன் காரணமாக இவ்வாறான நிலைமை ஏற்பட்டது. இது மிகவும் துக்கப்பட வேண்டிய விடயம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .