2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'காணிப்பிரச்சினை முஸ்லிம்களுக்கு வரையறுக்கப்பட்டதாக உள்ளது'

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 07 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிப்பிரச்சினையானது  முஸ்லிம்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட பிரச்சினையாக மாறியுள்ளது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

கடந்த யுத்த காலத்தின்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் அச்சுறுத்தல் காரணமாக சொந்தக் காணிகளை கைவிட்டவர்கள் மற்றும்; குறைந்த விலைக்கு காணிகளை விற்பனை செய்தவர்கள் தங்களின் காணிகளை மீளப்பெறுவதற்கான சட்ட ஆலோசனை வழங்கும் நடவடிக்கை, காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி ரீதியாக முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. காணி அலுவலகங்களுக்கும் பிரதேச செயலகங்களுக்கும் அவர்களில் பலர் ஆவணங்களுடன் அலைவதை நாம் காண்கின்றோம். இது முஸ்லிம் சமூகத்துக்கு மாத்திரம் உள்ளது என்பதை எவரும் மறுக்கமுடியாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1.35 சதவீதமான நிலப்பரப்பில் முஸ்லிம்கள் நெருக்கத்துடன் வாழ்கின்றனர். கடந்த யுத்த காலத்தின்போது, இம்மாவட்டத்தில் அவர்களின் காணிகளுக்குச் செல்லமுடியாமை காரணமாக தங்களின் காணிகளிலிருந்து வெளியேறியிருந்ததுடன், அச்சுறுத்தல் காரணமாக குறைந்த விலைக்கும் காணிகளை விற்பனை செய்துள்ளனர். இழந்த காணிகளை மீளப் பெறமுடியாத நிலைமைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர்' என்றார்.

'ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்; தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் 2012ஆம் ஆண்டு நீதி அமைச்சராக இருந்தபோது, காணிகளை இழந்தவர்கள் மீளப்பெறும் வகையில் அவர்களின் வழக்குகளைப் பதிவு செய்வதற்காக காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். இருப்பினும், அப்போது அது அங்கிகரிக்கப்படவில்லை.  

இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் இது தொடர்பான சட்டத்திருத்தம் முன்வைக்கப்பட்டு அது   அங்கிகரிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்திருத்தத்தின் ஊடாக காணி தொடர்பான வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யமுடியும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களும் இது தொடர்பான விளக்கத்தை அறியவேண்டும் என்பதுடன், தங்களின் காணிகளை மீட்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் தங்களின் காணி தொடர்பான ஆவணங்களைத் தேடுவதுடன், சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த விசேட ஏற்பாட்டுச் சட்டம் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் காலாவதியாகும். ஆகவே, குறித்த  காலத்துக்குள் வழக்குகளை தாக்கல் செய்வதற்குரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும். இதற்குத் தேவையான வழிகாட்டல் மற்றும் ஆலோசனையை சட்டத்தரணிகள் வழங்கமுடியும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X