2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

Suganthini Ratnam   / 2017 மார்ச் 15 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், எப்.முபாரக், எம்.எஸ்.எம்.ஹனீபா,  நடறாஜன் ஹரன்

கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகள், அரசாங்கத் திணைக்களங்கள், அரசாங்க நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களை  உடனடியாக நிரப்புவதற்கு அனுமதி கிடைத்துள்ளது என மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

எனவே, இந்த வெற்றிடங்களை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நிரப்;புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பான கலந்துரையாடல்;, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் தலைமையில் திறைசேரியில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது.

துறைசார் பட்டதாரிகளை அவரவர் துறைசார் ரீதியான  வெற்றிடங்களுக்கு நிரப்புவதற்கு ஏதுவான  யோசனையை முன்வைக்க வேண்டும் என்பதுடன், ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை உள்ளீர்ப்பது  தொடர்பான கட்டமைப்பைத் தயாரித்து   ஒரு கிழமைக்குள் வழங்குமாறு மாகாணப் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாமுக்கு பணிக்கப்பட்டது.  

மேலும், மாகாணத்தில்  காணப்படும் 4,703  ஆசிரியர்  வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகளை  எவ்வாறு  உள்ளீர்ப்பது  என்பது  தொடர்பான  அறிக்கையைத்;  தயாரிக்குமாறும் மாகாணக் கல்வி அமைச்சுக்கு பணிக்கப்பட்டது.  

சுகாதாரத் திணைக்களம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களில் காணப்படும்  வெற்றிடங்களை நிரப்புவதற்கு  உடனடியாக நடவடிக்கை  எடுக்குமாறு பொதுச்சேவை  ஆணைக்குழுவுக்கு  இதன்போது பணிக்கப்பட்டதுடன், இதற்கு ஏதுவான நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ளுமாறு  முகாமைத்துவத் திணைக்களத்துக்கு பணிக்கப்பட்டது.  

கிழக்கு மாகாணத்திலுள்ள 67  பாடசாலைகளில்  ஆய்வுகூட உதவியாளர்கள் 284,  காவலாளிகள் 261, சிற்றூழியர்கள் மற்றும் சுத்திகரிப்புப் பணியாளர்கள் 384 ஆகியவற்றுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதேவேளை, சுகாதாரத் துறையில் சுமார் 300 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இக்கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .