2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'கருத்தறியும் அமர்வு பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு எட்டவில்லை'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கான பொதுமக்களிடம் கருத்தறியும் அமர்வு பற்றிய விழிப்புணர்வு, மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்குச் சரியாக சென்றடையவில்லை என மட்டக்களப்பு காந்திசேவாச் சங்கத் தலைவர் ஏ.செல்வேந்திரன் தெரிவித்தார்.

நல்லிணக்கத்துக்கான பொதுமக்களின் கருத்தறியும் செயலணியின் மூன்று அமர்வுகள் ஏற்கெனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறைவடைந்துள்ளன. இறுதி அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை வாகரைப் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.  

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'நல்லிணக்கத்துக்கான பொதுமக்களின் கருத்தறியும் செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட அமர்வுகள் நடைபெறுவதற்கு முன்னதாக அதன் வலய மட்டச் செயலணி, பொதுமக்களுக்கு எந்தவித அறிவூட்டலையும் முன்கூட்டிச் செய்யவில்லை.  இந்த அமர்வு நடக்கும்போது, எதனை அங்கு முன்வைப்பது என்று தெரியாதவர்களாக மக்கள் அமர்வுக்கு வருகின்றார்கள்;' என்றார்.

'இது ஒருபுறமிருக்க, புத்திஜீவிகளான 11 பேர் கொண்ட நல்லிணக்க ஆலோசனைகளைப் பெறும் பொறிமுறை தேசிய செயலணியின் ஓர் அங்கத்தவர் கூட மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற மூன்று அமர்வுகளில் ஒரு அமர்வுக்குக் கூட சமூகமளிக்கவில்லை. மேலும், மாவட்டத்துக்கான வலய மட்டச் செயலணியின் தலைவரான சன்னி ஒக்கர்ஸ் என்பவரும் கூட இந்த அமர்வுகளில் ஒன்றிலேனும் பங்குகொண்டு மக்களின் கருத்துகளைப் பெறுவதில் ஆர்வமூட்டாமை வருத்தமளிக்கிறது' என்றார்.

'இது பற்றி மக்களுக்கு ஏற்கெனவே தெளிவூட்டப்பட்டிருந்தால், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறிமுறைக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களிடமிருந்தும் காத்திரமான கருத்துகள் முன்வைக்கப்பட்டிருக்கும். ஆகையால், மட்டக்களப்பு மாவட்ட அமர்வுகள் காத்திரமான கருத்துகள் பெறுவதற்கான தெளிவூட்டல் இல்லாததால் தோல்வி அடைந்ததாகவே கருதவேண்டியுள்ளது' எனவும் அவர் கூறினார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கப் பொறிமுறைக்கு கருத்துகளைப் பகிரும் விடயத்தில் அக்கறை காட்டுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். இந்தக் கருத்தறியும் பொறிமுறை வடிவமைப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமென்று செயலணி அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X