Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்தறிவதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது.
நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் இறுதி அமர்வு, பட்டிப்பளை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இங்கு மேற்படி சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம்.ஷயிட்;; தெரிவிக்கையில், 'மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் 04 பிரதேச செயலகப் பிரிவுகள் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற பிரதேச செயலகப் பிரிவுகளாகும்.
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் 13,757 குடும்பங்களும் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் 10,722 குடும்பங்களும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடிப் பிரதேச செயலகப் பிரிவில் 7,412 குடும்பங்களும் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் 8,201 குடும்பங்களும் வாழ்கின்றன' என்றார்.
'கடந்த 30 வருடகால யுத்தத்தின்போது, இம்மாவட்டத்திலுள்ள முஸ்லிம் ஊர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவையாகும். குறிப்பாக, 1985ஆம், 1990ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்தப் பிரதேசங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும்
இனப்படுகொலைகளின் பின்னர், முஸ்லிம் ஊர்கள் பல வருடங்களாகத் திறந்தவெளி அகதி முகாம்களாகக் காணப்பட்டன.
உயிர், உடைமை, அசையும் அசையாச் சொத்துகள், வாழ்விடங்கள், கல்வி, பொருளாதாரம் என்று அனைத்தையும் இழந்து மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களாக வாழ்கின்ற சரித்திரம் இந்த மக்களுக்குண்டு. அதேவேளை, பல்வேறு இன ரீதியான புறக்கணிப்புகளையும் இங்குள்ள முஸ்லிம்கள் அனுபவித்துள்ளனர்.
இது ஒரு சுருக்கமான பின்னணி. ஆயினும், இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் பாதிக்கப்பட்ட இம்மாவட்டத்தின் 2 இலட்சம் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொத்தமுள்ள சுமார் 40 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களின் கருத்துகளைப் பெறுவதிலும் புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளமை கவலையளிக்கிறது.
அதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்களிடம் கருத்தறியும் செயலணியின் 05 அமர்வுகள், தமிழ்ப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே ஒழுங்கு செய்யப்பட்டன.
எமது கரிசனை என்னவென்றால், 04 முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகளில் ஓரிடத்திலாவது இந்த கருத்தறியும் அமர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதேயாகும். ஆகையால், இந்தச் செயலணி கூட யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைப் புறக்கணிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, முஸ்லிம் மக்களின் கருத்துகளும் நல்லிணக்கப் பொறிமுறைக்கு அவசியம் என்பதை உள்வாங்குமாறும் அதற்கான கருத்துப் பெறும் அமர்வை மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவொன்றில் ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்' என அவர் மேலும் கூறினார்.

14 minute ago
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
28 minute ago
34 minute ago