2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

‘சிந்தனைகளுக்கு இடமளிக்கும் கலாசாரம் உருவாக வேண்டும்’

Gavitha   / 2016 நவம்பர் 21 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

“தமிழ் சமூகத்தின் இறுக்கத்தன்மை நீங்கி,எதிர்காலத்தில் மாற்றுச் சிந்தனைகளுக்கு இடமளிக்கின்ற ஓர் அரசியல் கலாசாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும்” என தமிழர் மகா சபையின் செயலாளரும் பிரபல எழுத்தாளருமான செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழர் மகா சபையின் செயலாளரும் பிரபல எழுத்தாளருமான செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணனின் “தமிழர் அரசியலின் மாற்றுச்சிந்தனைகள்” நூல் வெளியீட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை(20) மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“ஒரு உண்மையான,நேர்மையான,வெளிப்படைத் தன்மையான அரசியல் தலைமைகள் உருவாக வேண்டும் என்ற காரணத்தினாலேயே இவ்வாறான நூலினை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.வேறு எந்த கட்சியையும் குறைகூறுவதற்காக அல்ல.மக்கள் இதனை உணர்ந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்களை சிந்திக்கவிடுகின்றார்கள் இல்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற அடிப்படையில் யாதார்த்தங்களை உணர்ந்து எமது அரசியல்முன்னெடுப்புகளை மேற்கொள்ளவேண்டும்.

ஓர் அரசியல் அந்த சமூகத்தின் சமூக பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப முடியாவிட்டால் அந்த அரசியலினால் சமூகத்துக்கு என்ன பிரயோசனம். தமிழ் மக்கள் தேர்தலில் வாக்களித்துவிட்டால் தமது கடமை முடிந்துவிட்டது என கருதுகின்றனர். ஜனநாயக ரீதியாக யாரும் யாருக்கும் வாக்களிக்கலாம்.ஆனால் வாக்களித்துவிட்டால் கடமை முடிந்துவிடமாட்டாது. அதன் பிறகும் அந்த தலைவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று தட்டிக்கேட்க வேண்டும்.

பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட வேண்டும், விவாதிக்க வேண்டும். இவ்வாறான சமூகம் எங்களுக்கு வேண்டும் என்பதற்காகவே இந்த கலந்துரையாடல்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இதுவேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை” என்றார்.

“அரசியல் என்பது ஒரு விஞ்ஞானம்.வாக்குகளை சேகரிப்பது அரசியல் அல்ல. அந்த அரசியல் சமூகத்தினை கட்டியெழுப்பவேண்டும். அதற்காக சமூகம் விழிப்படைய வேண்டும் என்பதற்காகவே இந்த நூலினை உருவாக்கியுள்ளேன்” எனவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X