2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'சுமார் 1,500 ஏக்கர் காணிகளை மீட்டெடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை'

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 27 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் விவசாயிகளின் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 1,500 ஏக்கர் காணிகளை மீட்டெடுப்பதற்கு ஒருங்கிணைந்த அரசியல் நடவடிக்கை தேவை எனக் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

காணி மீட்புத் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மரப்பாலம் 'பி' கமநல அமைப்பைச் சேர்ந்த  விவசாயிகளின் ஏற்பாட்டில் ஏறாவூர் கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,'பூர்வீகமாக பயிர்ச் செய்கையிலும் நெற்செய்கையிலும் ஈடுபட்டுவந்த நிலையில், 1990ஆம் இடம்பெயர்ந்த மட்டக்களப்பு -பதுளை வீதியை அண்டியுள்ள விவசாயிகளின் சுமார் 1,500 ஏக்கர் காணிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இக்காணிகளை மீட்டெடுப்பதற்காக அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட போராட்டம் தேவையாகவுள்ளது.
இச்சமூக நன்மை கருதி ஏறாவூரைச் சேர்ந்தவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தை மாகாணசபை உறுப்பினரான என்னுடன் ஒருங்கிணையுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

காணிகளை இழந்துள்ள இந்த விவசாயிகளின் குறைகளை நான் மட்டும் தனித்து நின்று தீர்க்க முடியாது' என்றார்.
'காணிகளை இழந்துள்ள இந்த விவசாயிகளிடம் காணி உரித்துக்கான 03 வகையான ஆவணங்கள் கைவசம் உள்ளன. நாட்டின் ஜனாதிபதியிhல் கையொப்பமிடப்பட்டு வழங்கப்பட்ட சொர்ணபூமி உறுதிப்பத்திரங்கள், காணி ஒப்பம், வருடா வருடம் புதுப்பிக்கும் மற்றும் வரி செலுத்தும் ஆவணங்கள்  விவசாயிகளிடம் உள்ளன.

இந்த விவசாயிகளின் காணிகள் அபகரிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காகப்; போராடுகின்றனர். தங்களின் காணிகளில் மீண்டும் விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்கு உதவுமாறு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளரிடம்  விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தபோது,  குறிப்பிட்ட காணிகள் மேய்ச்சல்தரைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதேச செயலாளர், அக்காணிகள் தங்களுக்குச் சொந்தமானது என்று உறுதிப்படுத்தும் அக்காணிகளுக்குரிய சகல ஆவணங்களின் மூலப்பிரதிகளையும் போட்டோப் பிரதிகளையும் அவற்றைச் சரிபார்ப்பதற்காக பிரதேச செயலகத்தில் ஒப்படைக்குமாறு விவசாயிகளிடம் எழுத்து மூலம் கேட்டுள்ளார்.

இது விவசாயிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, காணிகளை இழந்த விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X