2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

'சிறுபான்மையினரின் சமூக, கலாசார விழுமியங்களைச் சீரழிக்கும் அபிவிருத்திகளை அங்கிகரிக்க முடியாது'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 06 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'சிறுபான்மையினமாகிய தமிழ், முஸ்லிம் மக்களின் சமூக, கலாசார விழுமியங்களைச் சீரழிக்கும் எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும்  எங்களால்  அங்கிகரிக்க முடியாது' எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

'வேலைவாய்ப்பு என்று கூறிக்கொண்டு, எமது சமூகம் அழியக்கூடிய வகையிலான மறைமுக நிகழ்ச்சி நிரல்களை நாம் அனுமதிக்க மாட்டோம்' எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் இன்று (6) அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'முப்பது வருடகாலமாக நிலவிய யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை வடக்கு, கிழக்கு மாகாணங்களில்; மதுபானத் தொழிற்சாலைகளை நிறுவி, அவற்றின் மூலம் வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் மேம்படுத்த முடியாது.
கடந்த 30 வருடகாலத்தில் பொருளாதாரமும் வாழ்வாதாரமும்  அளிக்கப்பட்ட சிறுபான்மையினரை மேம்படுத்துவதில் அக்கறை காட்டாது, மதுபான  உற்பத்தித் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பது இன்னமும்  சிறுபான்மையினரை  அழிக்க வேண்டும் என்ற மறைமுக நிகழ்ச்சிநிரல் செயற்பாட்டிலுள்ளது என்பதைக் காட்டுகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் போதைப்பொருள் வலயமாக மாற்றுவது கொண்டு, அம்மக்களின் வாழ்க்கையையும் கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் சீரழிக்க மறைமுக நிகழ்ச்சிநிரல் உள்ளது. அதன் ஒரு கட்டமாகவே அம்மாகாணங்களில் மதுபானத் தொழிற்சாலைகள், மதுபானசாலைகள், நிரம்பி வழிகின்றன. கஞ்சா விற்பனை இடம்பெறுகிறது' என்றார்.

'மேலும், உல்லாசப் பொழுதுபோக்குக்காக பாசிக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள உல்லாசப் பயண விடுதிகள் எவையும் சிறுபான்மையினருக்குச்  சொந்தமானதாக இல்லை என்பது ஒரு புறமிருக்க, அவற்றில் வேலைவாய்ப்புகளிலும் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுகின்றனர். சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒரு சிலர் அவற்றில் வேலைவாய்ப்பு பெற்றிருந்த போதிலும்;,  அவர்களுக்குப் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து அவர்களாக வெளியேறச் செய்யும் நடவடிக்கையில் பெரும்பான்மை முதலீட்டாளர்கள் செயற்படுகின்றனர். அவ்வெற்றிடங்களை பெரும்பான்மையினரைக் கொண்டுவந்து நிரப்புகின்றனர்.

உற்பத்தித் தொழிற்சாலைகள், தொழிற்துறை வலயங்கள் அமைந்துள்ள அவ்வப் பிரதேசங்களைச் சேர்ந்த 60 சதவீதமானவர்கள் வேலைவாய்ப்பு  பெற வழிவகைகள் செய்யப்பட வேண்டும் என்ற நியதியைப் புறந்தள்ளி, பெரும்பான்மையினருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் இடங்களாக தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மாற்றப்பட்டுள்ளன' என்றார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் கைவிடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை ஏன் மீளத் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .