2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'தெற்கிலுள்ள நல்லிணக்கச் சக்திகளை இணைத்து, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

'தெற்கிலுள்ள நல்லிணக்கச் சக்திகளை இணைத்துக்கொண்டு, தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கைக்கான காய்களை நகர்த்த வேண்டும்' என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
 
'இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ எல்லாக் காலத்துக்கும்; எமது காவலனாக இருக்கப்போவதில்லை.
நல்லிணக்கத்தின் அடிப்படையில் நாங்கள் எமது நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். நல்லிணக்கம் என்பது சரணாகதி அல்லவென்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்' எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு, வந்தாறுமூலை வேக்ஹவுஸ் வீதி புனரமைப்புவேலை இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'மாகாணசபை முறைமை இன்னும் கட்டமைப்பாக உருவாக்கப்படவில்லை. மத்திய அரசாங்கம் கொடுக்கின்ற விடயங்களைக் கையாளும் நிறுவனமாகவே தற்போது மாகாணசபைகள் இயங்குகின்றன. இதன் காரணமாக புதிதாக அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது' என்றார்.
 
'சமஷ்டி என்றால் பெரும்பான்மையின மக்களுக்கு கசக்கிறது. ஒற்றையாட்சி என்றால் தமிழ் மக்களுக்கு கசக்கின்றது. ஒற்றையாட்சி மற்றும் சமஷ்டி இல்லாமல் ஓர் ஆட்சியை உருவாக்க முடியுமா? தமிழர்களும் பெரும்பான்மையின மக்களும் ஏற்கக்கூடிய வகையில் எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி தற்போது சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.
 
அதில் சமஷ்டி முறையிலான ஆட்சி இருக்கும். சமஷ்டி என்ற பெயர் மட்டும் இருக்காது. ஒற்றையாட்சி என்பது ஒரு நாடு என்பதை மாத்திரம் குறிக்கக்கூடியதாக இருக்கும். அங்கு சட்டவாக்க அதிகாரமும் இருக்கும். அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்கிவிட்டு பறித்தெடுக்க முடியாத வகையில் பிராந்திய அமைப்பு என்ற திட்டம் அமையும்.

புதிய அரசியல் யாப்புக்கு தென்பகுதி மக்களின் அங்கிகாரத்தை அரசாங்கமே பெற்றுக்கொள்ளும். இந்த வகையில்;; எங்களது அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகிறோம்' என்றார்.
 
'அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குவதற்கான திட்டம் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பிடம் இல்லையென கூட்டமைப்பில் உள்ளவர்களில் சிலர் விமர்சிக்;கிறார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி உருவாக்கத்தின்போது, எங்களுக்கான அரசியலமைப்புச் சட்டத்தை முன்வைத்தோம்.
 
எமது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடியதும் இதுவரைகால உழைப்புக்கு பயன்தரக்கூடியதுமான ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை நாங்கள் பெறுவதற்கு தயாராகவுள்ளோம். பிராந்திய சபைகளாகவா அல்லது மாகாண சபைகளாக இருக்கப்போகின்றது என்பது தெரியாது. அவ்வாறு பிராந்திய சபைகளாக வரும்போது இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பாகும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X