2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'தமிழர்களும் முஸ்லிம்களும் வாழும் யதார்த்தத்தை உருவாக்க எங்களை அர்ப்பணிக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கையில் தமிழர்களும் முஸ்லிம்களும் வாழும் யதார்த்தத்தை உருவாக்குவதற்கு எங்களை அர்ப்பணிக்க வேண்டுமென கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

காத்தான்குடி பலநோக்குக் கூட்டுறவுச்சங்க வளாகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள உடற்பயிற்சிக் கூடம், திருமண வலீமா மண்டபத்துக்கான  அடிக்கற்கள் நாட்டும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'இந்த வருடம் ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்பு யாப்புத் திருத்தச் சட்டத்தில் எங்களின் தனித்துவம் எவ்வகையிலும் பாதிக்கப்படாதவாறு அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்படுத்தி இலங்கையில் தமிழர்களும் முஸ்லிம்களும் வாழும் யதார்த்தத்தை உருவாக்குவதற்கு எங்களை அர்ப்பணிக்க வேண்டும். உறவு வளர்வதற்கு தியாகம்; முக்கியமானதாகும்' என்றார்.

'1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்தவுடனையே முதன்முதலாக செய்த வேலை பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டமை. அச்சட்டத்தின் மூலம் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட மலையக மக்களின் குடியுரிமை ஒரே நாளில் பறிக்கப்பட்டது. இதற்கு எதிராக எங்களின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் குரல் எழுப்பி, தன்னுடைய தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தையும் சேர்த்துச் செயற்பட்டார்.

தமிழசுக்கட்சி தேன்றியது என்பது தமிழர்களின் உரிமையை காப்பாற்றுவதற்காக அல்ல. மனிதனுடைய அடிப்படை உரிமைகளை காப்பாற்றுவதற்காகவே. மனிதர்கள் எல்லோருக்கும் அடிப்படை உரிமைகள் உண்டு. அதில் பிரதானமானது குடியுரிமையாகும்.

வாக்குகளை நோக்காகக் கொள்ளாமல் மலையக மக்களின் குடியரிமைக்காக, மனிதாபினமானத்தை அடிப்படை உரிமையை அடிப்படையாகக் கொண்டே தமிழரசுக்கட்சி தோற்றம் பெற்றது.

தமிழரசுக்கட்சியின் மாநாடு திருகோணமலையில் முதன்முதலாக நடைபெற்றபோது, இலங்கையானது சமஷ்டி ஆட்சி முறையைக் கொண்டதாகவும் அச்சமஷ்டி ஆட்சி முறையில் தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் அரசு வேண்டுமென்ற தீர்மானத்தை பிரகடனம் செய்து நிறைவேற்றினோம்.

அரசு என்பது அரசாங்கமல்ல. அது மாநிலம் எனப்படும். அந்த மாநிலம் தமிழர்களுக்கான மாநிலமென்று வரையறுக்கவில்லை. தமிழ் பேசும் மக்களுக்கான மாநிலமென்றே கூறினோம். அது நிர்வாகக் கட்டமைப்பில் வரும்போது, வடக்கில் ஒரு நிர்வாகக் கட்டமைப்பும் கிழக்கில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நிர்வாகக் கட்டமைப்புகளும் கொண்டதாக தமிழ் மக்களுக்கான அரசு இருக்குமென்று அம்மாநாட்டில் பிரகடனம் செய்தோம். இக்குறிக்கோளுடன்; எமது அரசியல் நகரத் தொடங்கியது.

வெவ்வேறு காரணங்களினால் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் அடிபட வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இப்போது எமக்கு காலம் கனிந்துள்ளது. இந்த அரசாங்கத்தை உருவாக்கியவர்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் முக்கியமான உரிமையைக் கொண்டவர்களாக இருக்கிறோம். இந்நிலையை நாம் தொடர்ந்து செயற்படுத்த வேண்டுமாயின், எமது உறவை சீர்குலைக்க முற்படுபவர்கள் தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும். தமிழ், முஸ்லிம் உறவைச் சீர்குலைக்கும் சக்திகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும். தமிழ், முஸ்லிம் ஐக்கியமும் சமூக உறவும் எப்போதும் கட்டிக் காக்கப்பட வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X