2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இந்த நாட்டில் சிறந்த பல அம்சங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் இவ்வேளையில், நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். குழப்பவாதிகளுக்கு இது கைவந்த கலையாகிவிட்டதென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

யுத்தம் இடம்பெற்ற கடந்த 30 வருடகாலத்தில் தங்களின் பூர்வீக விவசாய மற்றும் குடியிருப்புக் காணிகளை இழந்தவர்கள், அக்காணிகளை மீளவும் பெற்றுக்கொள்வதற்கான சட்ட உதவி ஆலோசனைக் கூட்டம், ஏறாவூர் அஷ்ஹர் வித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

1985ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட இன வன்முறைகள், யுத்தம் ஆகியவை காரணமாக தங்களின் பூர்வீகக் காணிகளை இழந்த ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு -பதுளை வீதியை அண்டி வசிக்கும் விவசாயிகள் இக்கூட்டத்தில்  கலந்துகொண்டனர்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,  'நாட்டிலுள்ள சட்டங்களின் மூலம் நாட்டு மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய பல ஏற்பாடுகள் உள்ளன. ஆனால், எமது நாட்டின் நிர்வாகத்துறையிலுள்ள  துரதிருஷ்டம் என்னவென்றால், நாட்டிலுள்ள சட்டங்களை சரியாக அமுலாக்கம் செய்யப்படாமையேயாகும்.

சட்டத்தின் மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளை அதிகாரிகள் பெற்றுக் கொடுப்பதில்லை. இதனாலேயே, எமது நாட்டில் இத்தனை குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன' என்றார்.

'அரசியலமைப்பின் மூலம் விதந்துரைக்கப்பட்டுள்ள அத்தனை அதிகாரங்களும் அடிமட்ட மக்களுக்குக் கிடைக்குமாயின், அவர்கள் அதன் மூலம் அதிக நன்மைகளைப் பெறமுடியும்.
மாகாணசபைகளுக்குரிய அதிகாரங்கள் அரசியலமைப்பில் அங்கிகரிக்கப்பட்டிருந்தாலும், அது நடைமுறையில் அமுலுக்கு வராமல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தங்களின் பூர்வீகக் காணிகளை இழந்து தவிக்கும் மக்கள், தங்களின் காணிகளை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. தங்களின் காணிகளை இழந்துள்ள இதனை ஒரு வரப்பிரசாதமாகப் பயன்படுத்தி, அக்காணிகளை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்' எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X