2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

15 நிமிடங்களுக்கு மாத்திரமே ஒலிபரப்ப அனுமதி

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்துக் கோவில்களில் அதிகாலை 05 மணி முதல் 5.15 மணிவரை மாத்திரமே ஒலிபெருக்கிகளை பாவிக்க வேண்டுமென்பதுடன், இதை மீறும் கோவில்  நிர்வாகத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் சிந்தக்க பீரிஸ் தெரிவித்தார்.

இருப்பினும், கோவில் திருவிழாக் காலங்களில் மாலை 05 மணி முதல் 06 மணிவரையும் ஒலிபெருக்கிகளை பாவிக்க முடியுமெனவும் அவர் கூறினார்.

இக்கட்டுப்பாட்டை மீறும் கோவில் நிர்வாகத்தினருக்கு ஒலிபெருக்கிப் பாவனைக்குரிய அனுமதி தடைசெய்யப்படுமெனவும் அவர் கூறினார்;.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்துக் கோவில்களின் நிர்வாகத்தினருடன் செங்கலடி சித்தி விநாயகர் கோவில் முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போதே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,  
'இப்பிரிவிலுள்ள இந்துக் கோவில்களில் அதிக சத்தத்தமாக பாடல்களை ஒலிபரப்புவதால், கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாக மாணவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். திருவிழாக் காலங்களில் 24 மணிநேரமும் அதிக சத்தமாக பாடல்களை ஒலிபெருக்குவதால் க.பொ.த. உயர்தர, சாதாரணதர வகுப்பு மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.   

'பாடல்களை அதிக சத்தமாக ஒலிபெருக்கினால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி நிர்வாகத்தினரை கைதுசெய்ய முடியும். ஆகவே, கோவில் நிர்வாகத்தினர் இவ்விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்' என்றார்.

இந்தத் தீர்மானத்தை கோவில் நிர்வாகத்தினரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X