2025 மே 07, புதன்கிழமை

“நல்லாட்சியில் கருத்து சுதந்திரம் பேணப்படுகின்றது”

Niroshini   / 2015 செப்டெம்பர் 21 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் கருத்துச் சுதந்திரம் பேணப்படுகின்றன. தவறிழைத்தவர்களுக்கான தண்டனை வழங்கும் விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை கோட்டைக்கல்லாற்றில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசியலில் நெளிவுகள், சுழிவுகள், மற்றும் கோட்பாட்டு அரசியலும் உள்ளன. இவற்றை வைத்துக்  கொண்டு அநாகரீகமான முறையில் அரசியல் செய்வது எனக்கு பிடிக்காத ஒன்றாகும். செய்யாத விடயங்களை செய்ததாகவும் மற்றவர்களை அநாகரீகமான முறையில் திட்டித்தீர்ப்பது, எடுத்த எடுப்பில் அறிக்கைகள் விடுவது போன்றதெல்லாம் எனக்குப் பிடிக்காத விடயங்களாகும்.

நான் உழைப்பதற்காகவோ, பிழைப்பதற்காகவோ, சுரண்டுவதற்காகவோ, என்னுடைய பையை நிரப்பிக் கொள்வதற்காகவோ அரசியலில் ஈடுபடவில்லை. 30 வருட எனது வாழ்வில் இயன்றவரை களங்கமில்லாமல் எனது பணியினை செவ்வனே செய்துள்ளேன். அந்த திருப்பியோடுதான் நான் அரசிலுக்குள் இறங்கினேன்.

எந்த அரசியல் கட்சியை எடுத்துக் கொண்டாலும் வாதப் பிரதிவாதங்களும் விமர்சனங்களும் இருப்பது  இயல்பானதாகும். ஒரு கட்சியை ஆரோக்கியமாக்குவதற்கு விமர்சனங்கள் தேவை. ஆனால் அந்த விமர்சனங்களை கட்சிமட்டத்திலேயே தெரிவித்து தீர்வு காண்பதானது ஆரோக்கியமானதாக அமையும் என்றார்.

மேலும்,எமது சமூகத்தை வளர்த்தெடுக்க வேண்டுமாக இருந்தால் கல்வி என்கின்ற கருவியினை ஆயுதமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடந்த கால உள்நாட்டுப் பொறிமுறை தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை என எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதை போன்று தமிழ் மக்கள் உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றார்கள்.

உள்நாட்டு, வெளிநாட்டு, நீதிபதிகளையும், நிபுணத்துவம் வாய்ந்த அறிஞர்களையும் கொண்டு அமைக்கப்படுகின்ற ஒரு விசாரணை அமைப்பின் மூலமாக தமிழ் மக்கள் ஓரளவுக்கு எதையும் பெற்றுக்கொள்ளலாம என்கின்ற விடயம் இருக்கின்றது.

இவற்றை மேற்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் அரசியல் யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், இதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரம் தேவையாகவுள்ளது. இந்நிலையில் எமது தேர்ச்சியான தலைவர்களுக்கு இவ்விடயம் சார்பில் புரிந்துணர்வான அறிவுகள் உள்ளன எனவும் அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X