2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

'புதிய அரசியல் யாப்பில் தெளிவான சட்ட ஏற்பாடுகள் முன்வைக்கப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 26 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

புதிய அரசியலமைப்பு மாற்றத்தில் தெளிவான சட்ட ஏற்பாடுகள் கொண்டு வரப்பட்டால், மனித உரிமைகளைத் திட்டவட்டமாக மேம்படுத்தலாம் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் அதிகாரியும் தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான இராசையா மனோகரன் தெரிவித்தார்.

மாவட்ட சர்வமதப் பேரவையின் மாதாந்த ஒன்றுகூடலும் செயலமர்வும் கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் இன்று (26) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மனித உரிமைகள் பற்றிப் பேசும் 1972ஆம் ஆண்டின் அரசியல் யாப்பில் ஒருவர் தனக்குரிய மனித உரிமைகள் மீறப்பட்டால், எங்கே சென்று நிவாரணம் பெறலாம் என்று திட்டவட்டமாக எதுவும் கூறப்பட்டிருக்காததால் மனித உரிமைகள் மீறலுக்கு அந்த யாப்பு காரணமாக அமைந்தது.

1978ஆம் ஆண்டின் சரத்து 15இல் பல மட்டுப்பாடுகளுடன் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பு கறுப்பு, வெள்ளை என்ற தெளிவற்ற நிலையில் இருந்ததால், மனித உரிமைகளை மேம்படுத்த முடியவில்லை. அதன் விளைவாகவே பலர் அரசியல் கைதிகளாக சிறையில் வாட வேண்டி ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றங்கள் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசியல் யாப்பு தெளிவானதாக இருக்க வேண்டும். எனவே, தெளிவான புதிய அரசியல் யாப்பைக் கொண்டுவரும் முயற்சியில் நாமெல்லோரும் கரிசனை காட்ட வேண்டும்.

அரசியல் யாப்பில் மட்டுப்பாடுகள் இல்லாமல் மனித உரிமைகளைத் தெளிவாக விதந்துரைக்கக்கூடிய பாராபட்சமில்லாத சட்ட ஏற்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும். அதுவே இந்த நாட்டையும் மக்களையும் ஒரே பராமரிப்பில் பாதுகாக்க உதவும்' என்றார்.

'தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் புதிய அரசியல் யாப்பில் என்ன உள்ளடக்கங்கள் உள்ளன என்பது தொடர்பில் பொதுமக்களுக்கு  தெளிவில்லாத நிலைமை உள்ளது. இது தொடர்பில் எல்லாச் சமூகங்களைச்; சேர்ந்த புத்திஜீவிகள் அக்கறை கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் சிறுபான்மையின சமூக நல ஆர்வலர்கள் ஆகக்கூடிய அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்;' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X